மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாகவும், அவர்ல தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிசிசிஐ, விராட் கோலியை கேட்டுக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகளும், வதந்திகளும் பரவின. இதை மறுக்கும் வகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய கிரிக்கெட் அணியினர் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கின்றனர். இந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார்.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கு, அணியின் கேப்டன் கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா பெயரை பிசிசிஐ அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தனது மகள் வாமிகா வின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக கோலி, ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்துள்ளதாக வதந்திகள் பரவின. மேலும், ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், முப்பையில் இன்று நடைபெற்ற காணொளி காட்சி வாயிலான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்து உள்ளார். மேலும், ஒரு நாள் தொடரின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்வு குழுவினர் தெரிவித்ததாக கூறியவர், தான் ஓய்வு எடுக்க ஒருபோதும் விரும்பியது இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும், தனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று தெளிவுபடுத்தியவர், நான் டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விரும்புகிறேன் என்று பிசிசிஐயிடம் கூறியபோது, அது நன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்த தயக்கமும் இல்லை. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று என்னிடம் கூறப்பட்டது. நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர விரும்புகிறேன் என்று அந்த நேரத்தில் தெரிவித்தேன். எனது தரப்பிலிருந்து தொடர்பு தெளிவாக இருந்தது, இருந்தாலும், பிசிசிஐ எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி அளித்திருப்பதாகவும் கூறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டதை அறிந்தேன் என்று தெரிவித்த கோலி, “டெஸ்டுக்கான தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தலைமை தேர்வாளர் என்னைத் தொடர்பு கொண்டார். என்னுடன் டெஸ்டைப் பற்றி விவாதித்தார். அழைப்பு முடிவதற்குள் 5 தேர்வாளர்கள் நான் இனி ஒருநாள் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று முடிவு செய்ததாக என்னிடம் கூறப்பட்டது என்று கோஹ்லி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.