சென்னை: இந்திய அரசு மற்றும் மாநில அரசின்  சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு  மீது, சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா  மரணமடைந்துவிட்ட நிலையில், அவரது அ மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை தொடர்ந்து, நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு இன்று  மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்திய அரசு மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக புகார் அளிப்பவர்கள் பாதிக்கபடக்கூடாது என கூறியவர்,  தற்போது பதவியில் உள்ள எம்.பி.,-க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற பின்னரும் அதனை பயன்படுத்துவது தவறானது என  கூறினார்.

மேலும்,  ந்திய அரசு மற்றும் மாநில அரசின்  சின்னங்களை  அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என கேள்வி எழுப்பியவர்,  மேலும், முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸடபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.