டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல்நாளியே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், ஒத்தி வைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் அமளியில் ஈடுபட்டனர். இதை யடுத்து, அவை 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் 29ந்தேதி) இன்று தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கமான நடைமுறையில் பாராளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலும், மாநிலங்களவை துணைகுடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையாநாயுடு தலைமையிலும் தொடங்கியது. இதற்கிடையில், மக்களவையில் காங்கிரஸ் சார்பில், விவசாயிகள் உயிரிழப்பு, குறைந்த பட்ச ஆதாரவிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
அதுகுறித்து இன்றே விசாரிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.