டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்ட வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கை குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்து உள்ளார்.
மத்தியஅரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லிஎல்லையில் கடந்த ஓராண்டு காலமாக போராடி வந்த நிலையில், வேளாண் மசோதாக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேளாண் மசோதா வாபஸ் பெற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது,
மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (நவ. 29) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பயிர் பல்வகைப்படுத்தல், ஜீரோ-பட்ஜெட் விவசாயம் மற்றும் MSP முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவது போன்ற பிரச்சனைகளை விவாதிக்க ஒரு குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.
விவசாயிகள் பயிர்களை எரிப்பதை குற்றமாக கருதுவதாகவும், அதை தவிர்க்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது
மூன்று விவசாயச் சட்டங்கள் ரத்து என்ற அறிவிப்புக்குப் பிறகு, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்த வரை, அது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.அதை மாநில அரசுகளே முடிவெடுக்கும். அதுபோல, மாநில கொள்கையின்படி இழப்பீடு வழங்குவது குறித்தும் மாநில அரசுகள் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.