சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது மற்ற கைதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோல் முடிந்து இன்று சிறைக்கு செல்ல இருந்த நிலையில் அவருக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், பேரறிவாளனுக்கு மட்டும் பரோல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, அவர் பரோல் முடியும் காலத்தில் அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல்சோதனை செய்து கொள்வதும், அதைத் தொடர்ந்து அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வருவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
அதுபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு என சேர்ந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதை யடுத்து, அவரது தாயாரின் வேண்டுகோளை ஏற்று தமிழகஅரசு 6வது முறையாக பேரறிவாளனுக்கு பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.
பேரறிவாளனுக்கு முதன்முறையாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. அன்றுமுதல் அவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் வசித்து வருகிறார். அவருக்கு பாதுகாப்பாக பல காவல்துறையினரும் அங்கு முகாமிட்டு உள்ளனர். அவரது உடல்நிலை குறித்து, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 5 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் 25) முடிந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6ஆவது முறையாக மேலும் 30நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?