சென்னை: 
ழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு,  நாளை தமிழகம் வர உள்ளது என்று  பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழ்நாட்டிற்கு நாளை வருகை தரும் 7 பேர் கொண்ட மத்தியக் குழு, வரும் 22, 23 ஆகிய தேதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,  மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்தபின், 22ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு குழு ஆய்வு செய்யும் எனவும், கன்னியாகுமரிக்குச் சென்று மற்றொரு குழு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 23ஆம் தேதி, மயிலாடுதுறை திருவாரூர் , தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கு மற்றொரு குழுவும் சென்று ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் 24ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து மத்திய அரசின் மழை பாதிப்பு தொடர்பான ஆய்வறிக்கையை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.