பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார் என்பது பச்சைக் குழந்தைக்கும் தெரிகிறது!

அதிலும், இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கின்ற 5 மாநிலம் பொதுத் தேர்தல்களில், பா. ஜ. க. வுக்குப் பின்னடைவு ஏற்படும் சூழல் இருப்பது அவருக்குத் தெரிகிறது!

எனவே, இது விவசாயிகளின் நியாயத்தை உணர்ந்து அல்ல…. தனது கட்சி படுதோல்வி அடைந்து விடும் என்ற பயத்தினால் தான் இந்த ‘ ரத்து அறிவிப்பை’ வெளியிட்டிருக்கிறார்!

ஆனால், தனது ‘ நடுக்கத்தை’ மறைக்கும் முயற்சியாக, ” நாங்கள் இந்த மூன்று சட்டங்களைக் கொண்டு வந்ததால் விவசாயிகள் பெறப்போகும் பயன்களை அவர்களுக்குப் புரிய வைக்கத் தவறி விட்டோம்” என்று அசடு வழிகிறார்!

எது எப்படியோ, கடந்த ஒன்றரை வருடங்களாக மழை, குளிர், வெய்யில் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டு உறுதியுடன் போராடிய உழவர் பெருமக்கள், ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பணிய வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு புதிய சரித்திரம்!

இதற்காகத் தங்கள் 700 சகோதரர்களை அவர்கள் இழந்திருக்கிறார்கள்! உலக வரலாற்றிலேயே இது போன்ற ஒரு அமைதிப் போரை எந்த நாட்டு விவசாயிகளும் நடத்தியது இல்லை என்ற சரித்திரம் படைத்து விட்டார்கள்!

நமது தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின், இந்த மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் குரலைப் பதிவு செய்தார்!

ஆனால், திடீர் ‘ பச்சைத் துண்டு’ விவசாயிகள் வேடம் போட்டாலும் எடப்பாடி போன்றவர்கள் ஒன்றிய அரசுக்குப் பயந்து இந்த விவசாய விரோத சட்டங்களை ஆதரித்து முழங்கி, விவசாயிகளுக்குத் துரோகம் செய்தனர்!

இந்த “வாபஸ் ” பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ” வரப் போகும் 5 மாநில சட்ட மன்றத் தேர்தல்களில், அதிலும் குறிப்பாக,
அவர்கள் எதிர்பார்க்கும் உ. பி. விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கும் கோப அலை தான் மோடியின் இந்த அறிவிப்புக்குப் காரணம்” என்று கூறியிருக்கிறார்!

தான் இது வரை கொண்டு வந்திருக்கும் எந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் மீட்டுத் தனமாக,எவரையும் மதிக்காமல் நிறைவேற்றிய மோடி அரசு, உழவர்களின் எழுச்சி கண்டும், தங்கள் தோல்வி குறித்து நடுங்கியுமே இப்படிப் பின்வாங்கி இருக்கிறது!

ராகுலும், மற்ற எதிர்க்கட்சிகளும் சொல்வது சரிதான்!