சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்து உள்ளார்.

மோடி தலைமையிலான மத்தியஅரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் குறிப்பாக பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். டெல்லி எல்லையில் முகாமிட்டு ஒரு வருடமாக போராடி வந்தனர். இந்த போராட்டங்களின்போது சுமார் 600 விவசாயிகள் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்சிங் சன்னி செய்தியாளர்களிடம் பேசும்போது, பண்ணை சட்டங்களை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவு மிகவும் தாமதமானது ஆனால் வரவேற்கத்தக்க நடவடிக்கை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புகளுக்கு அரசு மற்றும் விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் சரண்சிங் சன்னி அறிவித்து உள்ளார்.
விவசாய சட்டங்கள் வாபஸ் குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் துணை முதல்வர் எஸ்.எஸ்.ராந்தவா இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்று கூறிய பாஜக, இப்போது ஏன் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது? இந்த முடிவுக்கான காரணத்தை அவர்கள் விளக்க வேண்டும். இந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பத்தினரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel