இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கும் தேர்தல் பத்திரங்கள்
தரணீதரன்
“ஒன்று நாம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைக்கச் செய்யவேண்டும் அல்லது செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் குவிக்க வேண்டும், ஆனால் நாம் இரண்டையும் ஒருசேர கொண்டிருக்க முடியாது” என்று அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் பிராண்டீஸ் ஒருமுறை எழுதினார்.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நிலை அரசியல் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் அதேபோல் அரசியல் வளர்ச்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நிலை பொருளாதார வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும், இது ஆபத்தை விளைவிக்கக்கூடிய சுழற்சியாகிறது.
உலகெங்கிலும் ஜனநாயகம் பணத்தின் முன் மதிப்பிழந்து நிற்கிறது, இந்தியாவில் அதன் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் மண்டியிட்டுக்கிடக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மற்ற ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தேர்தல் நிதி விஷயத்தில் தற்போது இந்தியா மிகவும் கட்டுப்பாடற்ற நாடாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் நிதியளிப்பதில் ஏற்றத்தாழ்வு இருக்குமானால், பெரும்பான்மையினருக்கு குறிப்பாக ஏழை மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், பணக்காரர்களின் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வாய்ப்பிருக்கிறது.
தேர்தல் செலவுகள் அதிகரிக்க அதிகரிக்க அரசியல்வாதிகளும் தேர்தல் நன்கொடையை சார்ந்தே இருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
தேர்தல் நிதிக்காக அரசியல் கட்சிகள், மக்கள் தொகையில் 0.1 சதவீதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரர்களை சார்ந்திருப்பதால் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்து விடுகிறது.
ராபர்ட் டாலின் கருத்துப்படி, “குடிமக்களின் தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் அரசாங்கம் நடுநிலையான அரசாக கருதப்படும், அதுவே ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம்”
இருப்பினும், வளர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் அரசியல் நிதிக்காக பெரும் பணக்காரர்களைச் சார்ந்திருப்பது, பெரும் பணக்காரர்களின் வாக்குகள் மற்ற பெரும்பான்மையான மக்களின் வாக்குகளை விட மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுகிறது
இனி ஜனநாயகம் என்பது ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பதல்ல, பணத்திற்கு வாக்கு (ஒரு டாலர் ஒரு வாக்கு) என்ற நிலைக்கு வந்துவிட்டது.
ஒரு நாட்டின் தேர்தல் நன்கொடை குறித்த கொள்கைக்கும் அரசின் பொது கொள்கைக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.
உதாரணமாக : ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனி நாட்டில் சிகரெட் விளம்பரங்களுக்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை. காரணம் சிகரெட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெரும் அரசியல் கட்சிகள் நிறைந்த ஒரே நாடு ஜெர்மனி என்பதால் தான்.
அதேபோல், அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களின் தேர்தல் பங்களிப்பு 1980 களில் 15 சதவீதமாக இருந்த நிலையில் 2016 ல் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில், 50 சதவீத அடித்தட்டு மக்களின் குறைந்த பட்ச ஊதியம் கணிசமாக குறைந்ததோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகள் பெருமளவு குறைக்கப்பட்டது.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூகாஸ் கராபரோபிஸ், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ஓ.இ.சி.டி.) நாடுகளை ஒப்பிட்டு அதன் குறியீட்டில் உள்ள வேறுபாடுகளையும், அந்நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்விற்கும் கட்டுப்பாடற்ற தேர்தல் நிதிக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்தார்.
சமீபத்தில் நடத்திய தேர்தல் நிதி பற்றிய விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் தேர்தல் செலவுக்கும் தேர்தல் வெற்றிக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக யாஸ்மின் பெக்கௌச் மற்றும் ஜூலியா கேஜ் ஆகியோர் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதே ஆய்வில், பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் நகராட்சித் தேர்தல்களுக்கு ஒரு வாக்கின் விலை முறையே 6 யூரோக்கள் மற்றும் 36 யூரோக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியான சட்டங்களின் மூலம் 1990களில் இருந்து தேர்தல்களில் தனியார் செலவினங்களைக் குறைத்து அதன் மூலம் தேர்தலில் பெரும் பணக்காரர்களின் செல்வாக்கை வெற்றிகரமாக நிராகரித்தன.
உண்மையில், பிரான்ஸ் 1995 இல் அனைத்து வகையான பெருநிறுவன நிதியுதவிகளையும் தடைசெய்தது அதோடு தனிநபர் நன்கொடையாக 6000 யூரோவை உச்சவரம்பாக அறிவித்தது.
சமீபத்தில், கார்ப்பரேட் நிதியுதவி தொடர்பான தொடர்ச்சியான ஊழல்களுக்குப் பிறகு, பெருநிறுவன நன்கொடைகளை பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகள் தடை செய்ததோடு தேர்தல்களுக்கான பொது நிதியுதவியை அறிமுகப்படுத்தியது.
நியூசிலாந்தும் 2019 இல் பெருநிறுவன நன்கொடைகளை தடை செய்துள்ளது.
ஓ.இ.சி.டி. நாடுகள் பலவும் தேர்தல் நிதி குறித்த வலுவான சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிதி மீதான தடையை அறிமுகப்படுத்திவரும் நிலையில், மோடியின் ஆட்சியில் இந்தியா பல தசாப்தங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
2017 ம் ஆண்டில் நிதி மசோதாக்களை மாற்றியமைத்து தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எண்ணற்ற பணத்தை அநாமதேயமாக நன்கொடையாக அளிக்க வழி செய்து, அதன் மூலம் லாபமடைந்து வருகிறது பாஜக.
தேர்தல் பத்திரங்கள் மூலம் யாரெல்லாம் நிதியளித்திருக்கிறார்கள் என்ற விவரங்களில் வெளிப்படைத் தன்மையில்லை, அரசிடம் மட்டுமே அனைத்து தகவல்களும் உள்ளதால் தார்மீக ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கும் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் முன் 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது.
மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் மொத்த ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்திற்கு அதிகமான நன்கொடை வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் பத்திரங்களின் அறிமுகம் அநாமதேய நன்கொடையாளர்களை அதிகரித்தது மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் போலி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.
2019 – 2020ம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் காட்சிகள் மொத்தம் ரூ. 3429 கோடி பெற்றுள்ளன, அதில் 76 சதவீதம் அதாவது ரூ. 2606 கோடி பாஜக-வுக்கு வந்துள்ளது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 சதவீத தேர்தல் பத்திரங்களே வந்துள்ளன.
மொத்த தேர்தல் பத்திரங்களில் 92 சதவீத பத்திரங்கள் ரூ ஒரு கோடி மதிப்புடையதாக இருந்ததோடு, ஒரே நிறுவனம் அதே ஆண்டில் பலமுறை பல ஒரு கோடி ரூபாய்க்கான பத்திரங்களை அளித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
ஒரு நிறுவனம் தனது மொத்த வருவாயில் 5 சதவீதம் லாபமீட்டும் பட்சத்தில் அதிகபட்சமாக 10 சதவீதம் நன்கொடை அளிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த அனுமானத்தின் அடிப்படையில், 600 கோடி ரூபாய் வருமானமீட்டும் நிறுவனத்தின் லாபம் ரூ. 30 கோடி என்று வைத்துக்கொண்டால், அந்நிறுவனம் சுமார் 3 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கும்.
இருப்பினும் இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் 7500 மட்டுமே உள்ளன.
எனவே, பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களில் 92 சதவீதம் ரூபாய் ஒரு கோடி மதிப்புடைய பத்திரங்களின் மடங்காக இருந்தால், அதில் பாஜக-வுக்கு சில நூறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக வந்திருக்கும் என்று எளிதாக யூகிக்க முடிகிறது.
பல்லாயிரக்கணக்கான கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெரும்பாலான தேர்தல் நன்கொடைகளை பாஜக பெறும்போது, அதன் கவனம் பரந்த பொது நலனில் இருக்குமா அல்லது பெரும் பணக்கார கார்ப்பரேட்டுகளின் நலன்களைக் கவனிப்பதில் இருக்கும்?
முன்னர் கூறியது போல், தனிநபர்களைப் போலவே அரசியல் கட்சிகளும் தங்களுக்கு நன்கொடையளித்தவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றன.
எனவே பாஜகவின் முக்கிய கொள்கை நோக்கம் பெரும் பணக்காரர்களின் (சில நூறு கார்ப்பரேட்டுகள்) நலன்களைக் கவனிப்பதாக இருக்கும், மேலும் இந்த வணிகங்களின் நலன்கள் பெரும்பாலும் வெகுஜனங்களின் பொது நலனுடன் முரண்படுகின்றன.
2017 முதல் கார்ப்பரேட் வரிகளைக் குறைப்பதும், எரிபொருள் வரி படிப்படியாக அதிகரிப்பதும் இதற்கு மிக ஆழமான உதாரணம்.
உலகிலேயே மிக அதிகமாக இந்தியர்கள் தங்கள் மொத்த வருமானத்தில் சராசரியாக 17% எரிபொருளுக்காக செலவிடுகின்றனர்.
அதே நேரத்தில், 2017 முதல், கார்ப்பரேட் வரி 35% லிருந்து 23% ஆக குறைக்கப்பட்டுள்ளது – இது வளரும் நாடுகளில் மிகக் குறைவான வரியாகும்.
முந்தைய ஆண்டுகளின் கார்ப்பரேட் வரி வருவாய் வளர்ச்சியை (~15%) கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கார்ப்பரேட் வரிகளைக் குறைத்ததன் மூலம், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2019-20, 2020-21) மத்திய அரசு ரூ. 6.27 லட்சம் கோடி வருவாயை இழந்து நிற்கிறது.
பல ஆண்டுகளாக நிகழும் இந்த கார்ப்பரேட் வரி குறைப்பு, தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அநாமதேய நிதிக்காக கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செல்லப்படுத்தப்பட்டு இருக்கிறதோ என்ற கவலை எழுகிறது.
கார்ப்பரேட் வரியில் இருந்து பெறப்படும் வருமானத்தை எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் சலுகைகளை வழங்க பயன்படுத்தாமல் இது தவறவிட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு தேக்கமடைந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவியிருக்கும்.
இதனால், வசதிப்படைத்தவர்களை விட சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்படுவது மோசமான பொருளாதார நிலையை எடுத்துக்காட்டுவதோடு வலுவிழந்துவரும் ஜனநாயகத்தைப் பற்றிய கவலையையும் அதிகரிக்கிறது.
கார்ப்பரேட் செல்வாக்கின் மற்ற எடுத்துக்காட்டுகள் வேளாண் சட்டங்கள் மற்றும் பொது சொத்துக்களை பணமாக்குதல், மிகவும் இலாபகரமான பொது நிறுவனங்களின் சொத்துக்கள் அரசின் கருவூலத்திற்கு நஷ்டமேற்படும் வகையில் அடிமாட்டு விலையில் கொடுக்கப்படுகின்றன.
இந்திய அமைப்பில் உள்ள ஆபத்து என்னவென்றால், செல்வந்தர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்திக் கொள்வதால், ஜனநாயகத்தை விட்டு நாம் செல்வந்தராட்சிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனெனில், பெரும் பணக்காரர்களின் நலன்கள் ஏழைகளின் நலன்களுடன் நேரடியாக முரண்படுகின்றன. ஏழைகள் ஒதுக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்து, தேர்தல் செயல்முறையிலிருந்து மெதுவாக விலகிச் செல்கிறார்கள்.
ஜனநாயகத்திற்கு நிதியளிப்பதில் அனைத்து குடிமக்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பது இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான முதல் படியாகும்.
எனவே, தேர்தல் பத்திரங்கள் உட்பட அனைத்து வகையான கார்ப்பரேட் நன்கொடைகளையும் இந்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
பிரெஞ்சு அரசியல் விஞ்ஞானி, ஜூலியா கேஜ் தனது “சமத்துவமின்மைக்கான விலை” என்ற புத்தகத்தில் “ஜனநாயக சமத்துவ நிதி”யை முன்மொழிந்துள்ளார், இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் ஆண்டுக்கு ரூ. 1000 அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த 1000 ரூபாயை குடிமக்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.
இரண்டாவதாக, தேர்தல்களுக்கு பொது நிதியுதவியை அறிமுகப்படுத்துவதாகும், இதன் மூலம் 5% வாக்குகளுக்கு மேல் பெறும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவர்களின் தேர்தல் செலவினங்களில் ஒரு பகுதி திருப்பிச் செலுத்தப்படும்.
தற்போது, தேர்தல் நிதிக்கு பங்களிக்கும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரி தள்ளுபடி மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது.
வரி வருவாயில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பை “ஜனநாயக சமத்துவ நிதி” மற்றும் தேர்தல்களுக்கான பொது நிதியுதவி ஆகியவற்றின் மூலம் ஓரளவு ஈடுசெய்ய முடியும்.
மூன்றாவது மற்றும் முதன்மையானது தேர்தலில் தனிநபர் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளருக்கு ரூ. 75 லட்சம் வரை வரம்பு நிர்ணயித்திருந்தாலும், அத்தகைய வரம்புகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன.
எனவே, தேர்தல் ஆணையம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, போட்டியிடும் வேட்பாளர்கள் அத்தகைய வரம்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்தியாவில் உணமையான ஜனநாயகம் தழைத்தோங்க தேர்தல் நிதி மற்றும் செலவு விதிமுறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக திகழ பணத்துக்கு வாக்கு (ஒரு டாலர் ஒரு வாக்கு) என்ற நிலை மாறி “ஒரு நபர் ஒரு வாக்கு” என்றாக வேண்டும்.