சென்னை: கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.11 கோடி வாடகையாக வசூலாகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
அறநிலையத்துறையின் கீழ் புதியதாக கல்லூரிகள் ஏதும் தொடங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தமிழக அரசு செயல்படுகிறது என்று கூறியதுடன், இந்து சமய அறநிலையத் துறையின் உள்ள கல்லூரிகளில் விரைவில் ஆன்மீக வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.
மேலும், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளில், இணைய வழியில் வாடகை செலுத்தும் வசதி கடந்த 8ம் தேதி தொடங்கப் பட்டது. அதன்படி முதற்கட்டமாக 5,720 கோயில்களில் இணைய வழி வாடகை வசூல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி சென்னையில் ரூ.3 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளது என்றும், மாநிலம் முழுவதும் ரூ.11 கோடி வாடகையாக வசூலாகி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.