சென்னை: காவல்துறையினர் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் வகையில், பாஸ் வழங்குவதற்கு ஏதுவாக, காவல்துறையினர் விவரங்களை அனுப்பி வைக்கும்படி, போக்குவரத்து துறை கடிதம் எழுதி உள்ளது.

 

பொதுவாக காவல்துறையினர் எந்தவொரு பேருந்தில் டிக்கெட் எடுப்பது கிடையாது. இது சில சமயங்களில் சர்ச்சையையும் உருவாக்கி உள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில்,  வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் காவலர்கள் பேருந்து பயணத்தின்போது  டிக்கெட் எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்ததுடன்,  இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். அதற்கு காவலர் அடையாள அட்டை வழங்கப்படும் என கூறினார்.

இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.  இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்துவதற்காக,  பேருந்தில் பயணம் செய்யும் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அனுப்ப போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி,   சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் காவலர்கள் இலவசமாக பயணம் செய்ய ஏதுவாக இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல்துறையினரின் விவரங்களை பட்டியலிட்டு அனுப்ப மாவட்ட காவல்துறை தலைவருக்கு  டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் குளிர்சாதன பேருந்து தவிர மற்ற பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.