நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்..
நெட்டிசன்
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
2015.. சென்னையில் எப்படி பெருமழை பெய்ததோ அதே போலவே இப்போதும்..
இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் பாதிப்பு அதிகமாகவே இருக்க செய்யும்.
மக்களுக்கான பாதிப்பு ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதைவிட அதிகமாக அரசியல் ஆரம்பித்துவிட்டது.
பாதிப்புக்கு காரணம் உங்கள் ஆட்சியா எங்கள் ஆட்சியா என்று இரண்டு கழகங்களும் வாளை சுழன்றுகின்றன..
2015-ன் போது மறக்க முடியாத விஷயங்கள் இரண்டு.. செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாக திறந்து அடையாற்றில் பெரு வெள்ளம் ஏற்பட காரணமாய் இருந்தது. இரண்டாவது சென்னையே கதறிய போதும் மூன்று நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியே வராதது..
ஜெயலலிதாவுக்குப் பிறகு இந்த நிலைமை இல்லை. முதலமைச்சராக இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி கூட களத்தில் வந்து மக்களோடு மக்களாக நிற்க தவறவே இல்லை.
வழக்கம்போல உணர்ச்சிப்பெருக்கில் 1,800 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி சென்னை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அறிவித்தார் எடப்பாடி..
அதன்படி எந்த அளவுக்கு பணிகள் நடந்தன என்பது இப்போது இரு கழகங்களும் நடத்தும் சண்டையில்தான் அடுத்தடுத்து தெரியவரும்.
நாம் அடுத்த விஷயத்திற்கு போவோம். பொதுவாக மழை பெய்த உடனேயே தண்ணீர் வடிந்து விடவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் வழக்கமான அளவை காட்டிலும் ஒரே நாளில் கன மழை கொட்டி தீர்க்கும் போது இதெல்லாம் சாத்தியமில்லை என்பது பலருக்கும் புரிவதில்லை..
மீடியாக்கள் விஷயத்தில் சொல்ல வேண்டியதே இல்லை.
கட்சிக்கு ஒரு சேனல் இருப்பதால் ஒரே இடத்தில் வேறு மாதிரியான மக்களின் வாக்குமூலங்களை வாங்கலாம்.
இன்னும் கேட்டால் எந்த டிவியின் மைக்கை பார்த்தால், எப்படிப் பேசினால் டிவியில் காட்டுவார்கள் என்பது மக்களுக்கே நன்றாக அத்துபடி என்பது வேறு விஷயம்.
எவ்வளவு மழை பெய்தாலும் அது விட்டபிறகுதான் எவ்வளவு நேரத்தில் நீர் வடிகிறது என்பதை பொறுத்தே வடிகாலமைப்பு வசதிகளை குறை சொல்ல முடியும். அதற்கு காரணமாக எந்த ஆட்சியாளர்கள் இருந்தார்களோ அவர்கள் மீதும் குற்றம் சுமத்த முடியும்.
சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற பெரு நகரங்களை பாருங்கள். எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட காலத்தில் வெள்ள பாதிப்பு குறைந்துவிடும். நாலாபக்கமும் தண்ணீர் வெளியேற வசதி இருக்கும் பட்சத்தில் இது சாத்தியம்.
பரந்து விரிந்த மாநகரமான சென்னை பொருத்தவரை அதன் அமைவிடமே ஒரு வித்தியாசமானது. கடலோரத்தை ஒட்டிய பகுதி. சென்னையில் வெள்ளம் என்றால் அது உடனடியாக போய் சேர வேண்டிய இடம் கடல் தான்.
ஆறு ஏரி குளம் போன்ற நீர் நிலைகள், தண்ணீரை உள்வாங்குவது போல கடல் என்பது அவ்வளவு சுலபமாக சமவெளி தண்ணீரை உள்வாங்காது.
அதிலும் கடல் மட்டத்தை விட அதிக உயரமில்லாத சென்னை போன்ற நகரங்களின் வெள்ளநீரை கடலை ஒட்டிய முகத்துவாரம் பகுதி மெதுவாகவே உள்வாங்கும்.
வெறும் சென்னைக்குள் பெய்து உருவாகும் வெள்ள நீரை வாங்குவதற்கே இந்த நிலைமை. இது போதாதென்று காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் சென்னை வழியாகத்தான் கடலுக்குள் செல்ல வேண்டும். அவற்றையும் நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட ஏதோ ஒரு வழியாக உள்வாங்கி அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு சென்னை மாநகருக்கு உண்டு.
ஆனால் சம தளத்தைக் கொண்டுள்ளளதால் சென்னை இந்த விஷயத்தில் திணறுகிறது.
மழை விட்ட பிறகு படிப்படியாக வெள்ள நீர் வடிந்துவிடும். ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள நீர் மட்டும் வடியவே வடியாது. இவற்றை வெளியேற்றத்தான் அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட வேண்டும்.
தாழ்வான பகுதிகளை விட்டு நீர் ஏன் வெளியேறியது ஒன்று. நீர்நிலைகள் ஆக இருக்கும் இடத்தில் கொண்டுபோய் குடியிருப்புகளை கட்டினால் நீர் எங்கே வெளியேறும்.
இன்னொன்று நீர் வெளியேற வேண்டிய பாதைகளை மறித்து கட்டிடங்களை கட்டினாலும் குப்பைகளை அதில் போய் பொதுமக்கள் கொட்டினாலும் நீர் வெளியேறாது..
மழை பெய்த அடுத்த வினாடியே தண்ணீர் வெளியேறி விடவேண்டும்.. இது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தண்ணீர் வெளியேறுவதற்குள் எவ்வளவு அரசியல் செய்துவிட முடியுமோ அதை செய்துவிடவேண்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசியலுக்காக உளறிக்கொட்டி விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு மழைக்காலத்தில் எங்களை பணிகளை செய்ய விடுகிறார்களா? எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விடுமா என்று ஆதங்கப்படுவது ஆளுங்கட்சியின் வேலை..
எல்லா தரப்பும் நிதர்சனமாய் அணுகாதவரை இப்படியே புலம்பி கொண்டு போக வேண்டியதுதான்