கோவை: தமிழகத்தில் இந்த ஆண்டு ஏராளமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கோவை  மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவன், மாணவி வெற்றி பெற்றுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி  சங்கவியை  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததுடன் பரிசாக மடிக்கணினியை வழங்கினார்.

நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்றது.  தமிழகத்தில் நீட் தேர்வை  1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.  இந்த தேர்வின் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் கோவை திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மாணவி சங்கவியும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் 202 மதிப்பெண் பெற்று மருத்துவப்படிப்பு பயில தகுதி பெற்றுள்ளார். அதுபோல,  ஆத்துப் பொள்ளாச்சி அருகே பழங்குடியின இந்து முடுகர் வகுப்பைச் சேர்ந்த மாணவரான ராதாகிருஷ்ணன் (19), வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாணவி சங்கவியை சந்தித்து லேப்டாப் பரிசு வழங்கிய தமிழ்நாடு  ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, மடிக்கணினியை பரிசாக அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் ஒரு சமூகமே முன்னேற்றம் அடையும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுப்படி, இந்த பழங்குடி மாணவி படித்து டாக்டராக வேண்டும் என முயற்சி செய்து வெற்றி பெற்று, தான் சார்ந்த பகுதிக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவரை ஊக்கப்படுத்தவும், பிற பழங்குடியின மாணவர்களுக்கு இவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்று கூறினார்.