சேலம்: தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மீது 6 பிரிவுகளில் தமிழ்நாடுகாவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடகா உள்பட மாநிலங்களில், மாநில அரசுகள் தங்களுக்கென தனித்தனியே கொடிகளை அடையாளப்படுத்தி, ஏற்றி வருகின்றன. அதுபோல தமிழகத்திலும் தனிக்கொடி உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே மறைந்த முதல்வர் கருணாநிதியும் தனிக் கொடியை ஆதரித்து உள்ளார். பல அரசியல் கட்சியினரும் அவரவர்கள் விருப்பப்படி கொடிகளை உருவாக்கி, இதை தமிழகத்தின் கொடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதுபோல, நாம் தமிழர் கட்சியும் தனிக்கொடியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கொடி சின்னத்தை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உருவாd கடந்த 2016-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் பொறிக்கப் பட்டு, இதுதான் தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் அறிவித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியினரின் ஜல்லிக்கட்டுப் போராட்டம், காவிரி போராட்டம் உள்பட பல போராட்டங்களிலும் இந்த கொடியை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் சீமான், அன்றைய தினம் சேலத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி அவரது கட்சி சார்பில் உருவாக்கப்பட்ட கொடியை, ஏற்றினார். இந்த கொடிக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை அங்கீகாரம் வழங்காத நிலையில், சீமான் ஏற்றிய கொடி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இதையடுத்து, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் நடிகர் சீமான் மீது, இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட்டது உள்பட 6 பிரிவுகளில் சேலம் அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ந்தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என அதிமுக, பாமக, நாம் தமிழர், உள்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், திமுக அரசு, தமிழ்நாடு என அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாளையே தமிழ்நாடு நாள் என கூறி, நவம்பர் 1ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.