உதகமண்டலம்
அனைத்து அணைகளும் கனமழையால் நிரம்பியும் உதகை மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் துயரம் அடைந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி, டைகர்ஹில்ஸ், கோரி சோலா, கிளன்ராக், ஓல்டுஊட்டி, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோயர், மார்லிமந்து அணை என அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.
ஆயினும் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்கள் இது குறித்து, ”தற்போது அனைத்து அணைகளும் நிரம்பியும், குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படாமல், லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுவது, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் முறையாகத் தண்ணீர் விநியோகம் செய்தால், குடிநீர் தட்டுப்பாடே இருக்காது.
நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து, செயற்கை தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. எனவே உதகையின் அனைத்து பகுதிகளுக்கும் முறையாகக் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து உதகை நகராட்சி அதிகாரிகள்,:தற்போது உதகையில் தண்ணீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளுக்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை உள்ளதால், அப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. விரைவில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.