நியூயார்க்

கொரோனாவால் அமெரிக்காவில் விமான நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால் தற்போது விமானங்கள் இயக்க ஆளில்லா நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடுதல் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம் பயணத் தேவை அதிகரித்து வருவதால் அதிகமான விமானங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது.

கொரோனா காலத்தில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி சில நிறுவனங்கள் ஊழியர்களை காத்திருப்பில் வைத்தது.  அவர்கள் வேறு பணிகளுக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். தற்போது விமான சேவை அதிகரித்து இருக்கும் நிலையில் விமானங்களை இயக்க பணியாளர் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

வானிலை தொடர்பான இடையூறுகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.  இதில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 800 க்கும் மேற்பட்ட விமானங்களை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ரத்து செய்தது.  இன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை 400 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்வதாக முன்கூட்டியே அறிவித்தது

இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சீமோர், “தற்போது காத்திருப்பில் இருக்கும் 1,800 விமான ஊழியர்களைத் திரும்பப் பெறுகிறோம். மேலும் 600 பேரை டிசம்பர் இறுதிக்குள் பணியமர்த்த நடவடிக்கை  எடுக்கப்படும். 4,000 விமான ஊழியர்களை வழக்கமான பணிச் சூழலுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என அறிவித்துள்ளார்.