திருவனந்தபுரம்
சபரிமலைக்கு மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலங்களில் வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதி இல்லை என தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 16 முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இதற்கு முந்திய நாளான நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை சபரிமலை மற்றும் மாளிகைபுரம் மேல் சாந்திகள் பொறுப்பேற்கின்றனர். அடுத்த நாள் முதல் புதிய மேல்சாந்திகள் நடை திறப்பார்கள்.
மண்டல பூஜை 41 நாட்ஜ நடந்து டிசம்பர் 26 அன்று முடிவடைந்து நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு மகரவிளக்கு பூஜைகளுக்காக மீண்டும் டிசம்பர் 30 அன்று நடை திறக்கபடுகிற்து. பம்பையில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய வசதிகள் குறித்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கேரள தேவசம் போர்ட் அமைச்சர் ராதாகிருஷ்ணன், “மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தத்தில் 15.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும். ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு தொடங்கிவிட்டது. இன்று வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த வருடமும் சபரிமலைக்குப் பெரிய பாதை வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள. சென்ற 2 வருடங்களாக இந்த பாதையில் பக்தர்கள் செல்லாததால் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு காலத்தில் வரும் பக்தர்களுக்குப் பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி யில்லை. சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. ஆனால் பக்தர்கள் நெய் அபிஷேகம் நடத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.