சென்னை: 2 நாள் பயணமாக இன்று மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கீழடிக்கு சென்று அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து, நாளை பசும்பொன் சென்று அங்கு தேவர் சிலைக்கு மரியாதை செய்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 11:15 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதியம் 12:30 அளவில் மதுரை விமான நிலையம் வருகை தரும் அவருக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கின்றனர். அதையடுத்து, அங்குள்ள சர்க்கியூட் ஹவுஸ் செல்லும் முதல்வர், பின்னர் மாலை 4:00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் கீழடி பயணம் செய்கிறார். அங்கு அகழ்வராய்ச்சி நடைபெற்ற பகுதிகள், அகழ் வைப்பகத்திற்கான கட்டுமானப் பணியையும் பார்வையிட உள்ளார். இரவு மீண்டும் மதுரை சர்க்கியூட் ஹவுசில் ஓய்வுவெடுக்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்கிறார்.
நாளை (அக்டோபர் 30) பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, காலை 7:30 மணிக்கு பசும்பொன் புறப்படும் ஸ்டாலின், காலை 7:45 கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, காலை 8:00 அளவில் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
பின்னர் அங்கிருந்து பசும்பொன் செல்லும் முதல்வர் காலை 9:15 மணி அளவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து திரும்பி விமான நிலையம் சென்று, மதியம் 1:30 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்புகிறார்.