சென்னை: அதிமுகவில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குடலிறக்கப் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
சமீப நாட்களாக, அதிமுகவுக்குள் வர முயற்சிக்கும் சசிகலாவால் பரபரப்பு ஏற்படுள்ள நிலையில், கட்சிக்குள்ளும் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சேலத்தில் அவர் முகாமிட்டிருந்த நிலையில், அங்கு அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்ததுடன், நேற்று முன்தினம் ஓமலூரில் நடந்த சேலம் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, தனக்கு அடிக்கடி வயிற்று வலி இருக்கிறது, அதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியவர், நேற்று சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பகுதியில் மீண்டும் பரிசோதனை செய்யப்படுவதுடன், பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து, இவர் இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.