பொன்விழா கொண்டாடும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் அதிமுக தொண்டர்களிடையேயும், மூத்த நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை யும் அருவருப்பையும் உருவாக்கி உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை கூறி வருவது, அதிமுக மீது மேலும் மேலும் சேறுவாரி வீசுவதுபோல உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜக ஆட்சியின் தயவால் இரட்டை தலைமையுடன் ஆட்சி தொடர்ந்து வந்த அதிமுக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம், இரட்டை தலைமை என்றும், ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மனப்பான்மையே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதிமு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் அதிமுகவின் அனைத்து மட்டங்களிலும் கோஷ்டி பூசில் நிலவி வருவது வெளிப்பயைக அம்பலமானது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளார், தேர்தலில் போட்டியிட முடியாதவாறு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா.
தான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு, அதிமுக கொடி பொருத்திய காரில் வலம் வருகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா. அதை தடுத்து நிறுத்த முடியாத தரங்ககெட்ட தலைமையாக அதிமுகவின் இரட்டை தலைமை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வரும் 30ந்தேதி நடைபெற உள்ள தேவர் பூஜையை சாக்காக வைத்துக்கொண்டு சசிகலா, தனது அரசியல் சதுரங்கத்தை ஆட தொடங்கி உள்ளார். தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வரும் முக்குலத்தோர் மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார். 3 நாட்கள் மதுரையில் முகாமிடும் சசிகலா, பல அதிமுக தலைவர்களை சந்திக்கவும், சமூதாய தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இதன்மூலம் அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிராக, தனி தலைமை உருவாக்கும் நோக்கில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு பின்புலமாக டிடிவி தரப்பில் இருந்து அமைதியான முறையில் கோடிக்கணக்கில் பணம் புழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி ஆட்சியின்போது துணைமுதல்வராக பதவி இறக்கம் செய்யப்பட்டதில் இருந்தே, எடப்பாடிக்கு எதிரான மனைநிலையில்தான் இருந்து வருகிறார். அதுபோல, வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடுதான், தென்மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்ற குற்றச்சாடு ஒருபுறமும், ஈபிஎஸ்-ன் தவறான அரசியல் முடிவுகள் தான் தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த ஓபிஎஸ்-க்கு, ஏமாற்றமே மிஞ்சியது. அமைச்சர்களுக்கு நிகராக எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எடப்பாடி பிடுங்கிக்கொள்ள கடுங்கோபத்தில் உள்ள ஓபிஎஸ், சமீப நாட்களாக, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசன் நடவடிக்கைக்கு ஓப்பனாக ஜால்ரா தட்டி வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலில்தான் தற்போது, தேவர் குருபூஜையை வைத்து தனது ஆட்டத்தை தொடங்கும் வகையில் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். பசும்பொன் தேவருக்கு பொருத்தப்படும் தங்கக்கவசம் மதுரை வங்கியில் இருந்து எடுத்த நாளின்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என கொளுத்தி போட்டார். அவர் கொளுத்தி போட்ட சசிகலா என்ற தீக்குச்சி கொளுந்து விட்டு திகுதிகு வென எரிந்து கொண்டிருக் கிறது.
சசிகலா, ஓபிஎஸ் என பல முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் பலர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒன்றிணையும் வகையில்தான் ஓபிஎஸ் இவ்வாறு கூறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஓபிஎஸ்-ன் திடீர் மனமாற்றம் எடப்பாடி அன் கோவிற்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொங்கு குரூப்ஸ் தனி ஆலோசனை நடத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவாளர்களுடன் தனி ஆலோசனை மேற்கொண்டார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதுபோல ஒபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் இரு தரப்பினரும், தங்களை வாழ வைத்த அதிமுக கட்சிமீது தாங்களே சேறு வாரி வீசி வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீவிரமாக களமிறங்கி உள்ள நிலையில், மதுரை உள்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். இதனால், அதிமுகவில் தற்போது ஜாதிய ரீதியிலான பிளவும் ஏற்பட்டு வருகிறது.
ஓபிஎஸ் கருத்து கூறிய ஜெயக்குமார், சசிகலாவுக்கு எதிரான தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், ஒருபோதும் சசிகலாவுடன் சேர மாட்டார் என்று செய்தியளார்களிடம் கூறி ஓபிஎஸ்சிடம் இருந்து முதல்வர் பதவி பிடுங்கப்பட்டபோது, அவர் கூறிய தகவல்களை பிளாஷ்பேக்காக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடைபெற்று வரும் மோதலை மேலும் கடுமையாக்கியது.
இந்த பரபரப்பான சூழலில் தஞ்சை சென்ற சசிகலா, அங்கு டிடிவி தினகரனின் மகள் திருமணத்தில் பங்கேற்றார். இந்த திருமணத்திற்கு ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்பட பல மூத்த அதிமுக தலைவர்கள் வந்திருந்தாக கூறப்படுகிறது. அவர்களிடம் சசிகலா பேசியதாகவும் கூறப்பட்டது. டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா பங்கேற்றதும், சசிகலாவை சந்தித்ததும் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்தே, டிடிவி தினகரனும், சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தை வரவேற்றுஅறிக்கை விட்டார். அதிமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான ஜேசிடி பிரபாகரன் என்பவர் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஓபிஎஸ் கருத்தை விமர்சனம் செய்து கேபி முனுசாமி அளித்த பேட்டியால் தென்மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
அதுபோல தெக்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும், அதிமுக தலைமைக்கு மாற்றம் தேவை என ஓபிஎஸ்-க்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் உள்பட மதுரை முன்னாள் மேயர் என பலர் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சசிகலா விரைவில் அதிமுகவில் இணைவது உறுதி என்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வருவது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலாவின் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி, இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சரியான முடிவை எடுக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கி சசிகலா அல்லது ஓபிஎஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்க வேண்டும் என கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அறிவித்தபடி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர் வைக்காததால் தென்மாவட்ட மக்கள் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை வைக்க வேண்டும் எனவும் புகழேந்தி கேட்டுக் கொண்டார்.
இதனால் அதிர்ந்து போன எடப்பாடி சார்பில் உடனே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர், ஜெயக்குமார் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும், புகழேந்திக்கெல்லாம் பதில் கூறத் தேவையில்லை என காட்டமாக விமர்சித்தார்.
தொண்டர்களின் வியர்வை, ரத்தம் உழைப்பால் உருவானது தான் அதிமுக, இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது இது ஒரு இரும்பு கோட்டை என கூறியதுடன், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை, மேலும் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் கட்டாயம் நீக்கப்படுவார்கள் என்றார்.
கடந்த வாரம், ஓபிஎஸ் இல்லாமல் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்துவிட்டு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுவருவது பற்றிய கேள்விக்கு, ‘சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போல….’ என்று ஆவேசமாக பதிலளித்தார். இது சசிகலா ஆதரவாளர்களால் கடுமையாக கண்டிப்பட்டது.
தனக்கு முதல்வர் பதவி அளித்து வாழ்வு அளித்த சசிகலாவை இவ்வளவு கீழ்த்தரமாக எடப்பாடி விமர்சிப்பதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்தே, ஓபிஎஸ் உள்பட பலர் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக தலைவர்களுக்குள் சர்ச்சைகளை உருவாக்கும் வகையில், சில பல மூத்த தலைவர்களுக்கு மறைமுகமாக கொம்பு சீவி விடும் வேளையை டிடிவி தினகரன் கமூகக்காக செய்து வருவதாகவும், அதின் எதிரொலிதான் தீபாவளி பட்டாசாக அதிமுகவில் வெடிக்கத் தொடங்கி உள்ளது என கூறப்படுகிறது.
விரைவில் அதிமுக மீண்டும் உடையும் வாய்ப்பு உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து, கட்சியை கைபற்றும் நோக்கில் சசிகலா தீவிரமாக இறங்குவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.