துரை

மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  தினசரி இந்த விலைகள் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.   இதனால் நாடெங்கும் உள்ள மக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.   இந்த விலை உயர்வை எதிர்க்கட்சிகள் கண்டித்த போதும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மக்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன்,

“இலங்கையில்  தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டுமெனத் தமிழினம் போராடிக்கொண்டிருக்கிறது. ராஜபக்சேவை தண்டிக்க உலகம் தழுவிய அளவில், மனித உரிமை ஆர்வலர்களும், தேசிய இன விடுதலைப்போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், குரல் கொடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் விமான நிலையத்தைத் திறக்க வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. எனவே உத்தரப்பிரதேச மாநில அரசையும், மத்திய அரசின் இத்தகைய செயலையும் கண்டிக்கிறோம்.

மோடி அரசின் ஒரே சாதனை  டீசல், பெட்ரோல் விலை உயர்வு   எண்ணெய் நிறுவனங்களின் முழு கட்டுப்பாட்டில் விலை நிர்ணயத்தை ஒப்படைத்து இருப்பதால் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு முனைப்பும் மத்திய அரசு காட்டவில்லை.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த விலை உயர்வுக்கு முழுமையாக மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்.  நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.”

எனத் தெரிவித்துள்ளார்.