சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்போம் என சென்னை  உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு உறுதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்து கோவில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின்கீழ் அர்ச்சகர்களை நியமித்து வருகிறது. ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகஅரசின் நடவடிக்கை  சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக  கோவில் வழிபாட்டாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தமிழ்நாடு இந்து மத நிறுவன ஊழியர்கள் (சேவை நிலை) விதிகள், 2020 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கோவிலில் அர்ச்சர்கள், மற்றும் ஒதுவார்கள் மற்றும் பணியாளர்களை  கோயில் அறங்காவலர்கள் மட்டுமே  நியமிக்க வேண்டும் என்றும் அர்ச்சகர்களை அறநிலையத்துறை நியமிக்க அதிகாரம் இல்லை , ஆனால் அரசு விதியை மீறி செயல்பட்டு வருகிறது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில்களில் அர்ச்சகர்கள் ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. ஆனால், தமிழகஅரசு அதை மாற்றி உள்ளது. இது அறக்கட்டளைகளின் உரிமைகளை நியாயமற்ற முறையில் கட்டுப்படுத்தியது மற்றும் இந்து மத மற்றும் அறக்கட்டளை சட்டம், 1959 க்கு எதிராக உள்ளது என்று வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் மூலம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள்ள கோவில்களில் கடந்த  2011 முதல்  அறங்காவலர்களை அரசாங்கம் நியமிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், விதிகளை மீறி  “அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தகுதியற்ற அர்ச்சகர்களை  நியமிக்கிறார்கள். இந்த நடைமுறை ஆகமங்களுக்கு எதிரானது (ஆன்மீக விதிகள்). பல்வேறு கோவில்களுக்கு தொடர்புடைய ஆகமங்கள் உள்ளன மற்றும் நியமனங்கள் ஆகமங்களின் படி பாரம்பரிய அறங்காவலர்களால் செய்யப்பட வேண்டும், ”என்று வாதிட்டார்.

இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. மேலும் அறங்காவலர்கள் 4 வாரத்திற்குள் நியமிக்கப்படு வார்கள் என்றும் உறுதி கூறியது.

இதையடுத்து, தமிழகஅரசின் நடவடிக்கைக்கு  இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் அறிவித்த நிலையில்,  கோவில்களுக்கு தொடர்புடைய குறிப்பிட்ட ஆகமங்களில் எந்த மீறலும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அரசின் நியமனங்கள்  இந்து மத சட்டம் 1959 (HR&CE) சட்டத்தின் கீழ் பொருத்தமான படிவமாக இல்லையென்றால், அரசின் எந்த நியமனமும் மனுவின் இறுதி முடிவுக்கு கட்டுப்படும் என்று உத்தரவிட்டனர்.

அறங்காவலர்களின் காலியிடங்களை தகுந்த முறையிலும், சட்டத்தின்படி நிரப்பவும் நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியது.  மேலும், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.