டெல்லி: உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தற்போது 2023ம் ஆண்டு வரை விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு பிஎச்டி (PhD) படிப்பு கட்டாயம் என்கிற நடைமுறை 2021ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) கடந்த 2018ம் ஆண்டு கொண்டு அறிவித்தது. பேராசிரியர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.
ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், பிஎச்டி படிப்பு கட்டாயம் என்ற அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு தளர்த்தி 2 ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளது.
அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பட்ட காலத்திற்குள் தங்கள் ஆய்வுகளை முடிப்பத்தில் சிரமம் நிலவுவது தொடர்பாக மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர் அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக்கழக மாணியக் குழுவுக்கு கூறப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.