சென்னை

மையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 10 மாதங்களில் ரூ.205 அதிகரித்துள்ளது.

நாட்டில் பெரும்பாலான மக்கள் சமையலுக்கு எரிவாயுவையே நம்பி உள்ளனர்.  குறிப்பாக மத்திய அரசு அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கியதால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளனர்.  எரிவாயு சிலிண்டர் விலை மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மாற்றப்பட்ட நிலையில் தற்போது அடிக்கடி விலை உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு மிகவும் துயரத்தை உண்டாக்கி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறுமுகத்திலேயே காணப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 205 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு உருளையின் விலை 710 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்று முறையாக 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய் ஆனது. பிறகு மார்ச் மாதத்தில் 835 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர், ஏப்ரல் மாதத்தில் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விற்பனையானது.

மே, ஜூன் மாதங்களில் விலையில் மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி ஒரு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிறகு, ஆகஸ்ட் 17ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 875 ரூபாய்க்கும் விற்பனை செய்யபட்டது,

மீண்டும் செப்டம்பர் ஒன்றாம் தேதி 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆண்டு தொடக்க விலை ரூ.710 ஆக இருந்து தற்போது ரூ.205 அதிகரித்துள்ளது.