நாசிக்

விரைவில் ஆம்புலன்ஸ் ஹார்ன் ஓசை வாத்திய இசையாக மாற்றப்பட உள்ளதாக பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பிய வண்ணம் சாலைகளில் செல்வது வழக்கமாகும்.  எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல மற்ற வாகனங்களை வழி விடச் செய்ய இந்த ஒலி அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஒலி ஒரு எச்சரிக்கை ஒலி போல அமைந்துள்ளதால் மற்ற வாகன ஒட்டிகள் இவற்றுக்கு உடனடியாக வழி விடுவார்கள் என்னும் எண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று நாசிக் நகரில் நடந்த நெடுஞ்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ” இனிமேல் இந்தியாவில் ஓடும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்றத் திட்டமிட்டு வருகிறோம்.

இந்தியாவின் இசைக்கருவிகளான ப்ளூட், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி அமைக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம்.  விரைவில் இதற்கான சட்டமும் இயற்றத் திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாக இருக்குமாறு மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். அவற்றை ஆல் இந்தியா ரேடியோவில் உள்ள இசை போன்று இருக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம்

அகில இந்திய வானொலி காலையில் ஒலிபரப்பைத் தொடங்கும்போது காதுகளுக்கு இனிமையான இசை ஒலிக்கப்படும். அதைப் போன்று ஆம்புலன்ஸ் சைரன் இருக்குமாறு யோசித்து வருகிறோம். தற்போது ஆம்புலன்ஸ் சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும்போது ஒலிக்கவிடும் சைரன் ஒலியும் வெறுப்பாக இருக்கிறது.” என உரை ஆற்றி உள்ளார்.