மஸ்கட்
ஓமன் நாட்டில் வீசிய ஷாஹின் புயலால் கடும் சேதம் ஏற்பட்டு இதுவரை 13 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நேற்று முன் தினம் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஷாஹின் புயல் கரையைக் கடந்தது. தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி விமான நிலையம் தண்ணீரில் சூழப்பட்டது. பல குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. பல வாகனங்கள் முழுகியதால் ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்த புயலுக்கு 13 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமன் வானிலை ஆய்வு நிலையம் ஷாஹின் புயல் கரையை கடந்தாலும் கனமழை மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால் கடலோர மாகாணங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் உள்ளது.
ஷாஹின் புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 120 முதல் 150 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. கனமழை காரணமாக இவற்றை அகற்றும் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. மேலும் புயல் நேரத்தில் கடலலைகள் 32 அடி உயரத்துக்கும் அதிகமாக அடித்ததால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.