லக்னோ
உத்தரப்பிரதேச வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று வேளான் சட்டங்களை எதிர்த்து உபி மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துணை முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் காத்திருந்தனர். அங்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வந்த கார் மோதி 2 விவசாயிகள் அங்கேயே உயிர் இழந்தனர். தொடர்ந்து நடந்த வன்முறையில் 6 விவசாயிகள் மரணம் அடைன்ந்தன்ர்.
மரணமடைந்த விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல அரசியல் தலைவர்கள் அங்கு வரத் தொடங்கினர். அவர்களைத் தடுக்க காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல லக்கிம்பூருக்கு வந்தார்.
ஆனால் அவரை மாவட்டத்துக்குள் வராமல் பெண் காவல்துறையினர் வளைத்தனர். இதனால் காவல்துறையினரிடையே பிரியங்கா காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநிலத்தில் பிரியங்கா உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினர் தடுத்து நிறுத்தப்படுவதால் கடும் பதற்றம் நிலவுகிறது. மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்கு அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராம. சுகந்தன் தனது டிவிட்டரில், ”உத்தரப்பிரதேச மாநிலம் தனி நாடாகி விட்டதா? எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு விசா வாங்கித்தான் செல்ல வேண்டுமா” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.