கோவை: கோயமுத்தூர் ஆணைமலைப் பகுதியில் 5 மாத கைக்குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் அதிரடியாக செய்லபட்டு 24மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். விசாரணையில்,  ரூ.90 ஆயிரம் பணத்திற்காக 5 மாத குழந்தை  கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

கோவையை அடுத்த ஆனமலை பகுதியில் துணி வியாபாரம் செய்து வருபவர், மைசூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் தம்பதி. இவர்களுக்கு  5 மாத குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சமீப நாட்களில்   ஆனைமலை பேருந்து நிலையத்தில் தங்கி துணி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவர்களின் 5 மாத குழந்தை  கடந்த 28-ம் தேதி இரவு திருடு போனது. இதனால் பதறித்துடித்தவர்கள், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகார் மனுவில், மணிகண்டனின் மனைவி சங்கீதா, பேருந்து நிலையித்தில்  குழந்தைகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தபோது, குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக ஒருவர் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தைக்கொண்டு குழந்தைகளுக்கு உணவு வாங்க சங்கீதா சென்றதும், அந்த மர்ம நபர் 5 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் உணவு பார்சல் வாங்கிக்கொண்டு திரும்பி வந்த சங்கீதா, கைக்குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தில் தேடியதுடன்,  ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்து குழந்தையை தேடி வந்தது. பேருந்து நிலையம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு நடத்தியது அதில், புளூ நிற சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது.

அந்த நபர் சென்ற வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு நடத்திய காவல்துறையினர், அந்த நபர் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில்  அங்கலக்குறிச்சி கிராமத்திற்கு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற காவல்துறையினர், அங்கு குழந்தை கடத்தல் காரர்கள் ராமர் மற்றும் முருகேசன் ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தை, முத்துப்பாண்டி என்பவருக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. அதனை அடுத்து முத்துப்பாண்டியையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர்.

அதிரடியாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  24 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் முத்துசாமி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நாகரத்தனம், கோவையில் 15 இடங்களில் வெளி மாநில மக்கள் வாழும் பகுதிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகள் வைத்து பிச்சை எடுப்பவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.