தமிழ்சினிமாவின் தவப்புதல்வன்…
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
சிறுவயதில் போஸ்டர்களிலும் தியேட்டர்களிலும் பார்த்து வியந்த நடிகர் திலகம் சிவாஜி நம் வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு மிக மிக முக்கியமான அற்புதமான பக்கம்..
அந்த நிழல் உலக அதிசயத்தை நிஜவாழ்க்கையில் நம்மோடு பின்னிப்பிணைந்த, என்றைக்குமே மறக்கமுடியாத ஒரு நிஜ சம்பவத்தில் இருந்து தொடங்குவோம்..
எப்படிப்பட்ட தகவல்களையும் செய்திகளையும் சகஜமாக கடந்து செல்லும் சன் டிவியின் செய்தி அறை என்றாலும் அன்று நாங்கள் கேட்ட தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது.
ஆம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமாகிவிட்டார் என்ற தகவல்தான் அது. மருத்துவமனையில் உள்ள சிவாஜி குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக சொன்னபிறகு பிரேக்கிங் நியூஸ் போடுவது என்று நியூஸ் எடிட்டர் ராஜா சார் தலைமையிலான செய்தி அறை தீர்மானித்தது.
சன் டிவி செய்தியில் அரைமணிநேர செய்து ஒளிபரப்பை தவிர பிரேக்கிங் நியூஸ் போட்டு ஸ்கொரோல் விடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. மிக மிக முக்கியமான செய்தி என்றால் மட்டுமே போடவேண்டும்.
நடிகர் திலகம் காலமானார் என்ற பிரேக்கிங் நியூஸ் வரிவரியாய் ஓட ஓட உலகமே அதிர்ந்து போனது.
பின்னர் இரவு எட்டு மணி செய்தியில் சொன்னது, நண்பன் இறந்த சோகம் தாளாமல் கலைஞர் கண்ணீரோடு அளித்த பேட்டி, அதை ராஜா சார் மின்னல் வேகத்தில் செய்தியாக்கி, வானிலை முடிந்து மீண்டும் இன்று முக்கிய செய்திகள் சொல்வதற்கு முன்பாக சேர்த்து ஒளிபரப்பியது..
சமீபத்தில் எங்கள் சீனியர் அண்ணன் மாடக்கண்ணு இதையெல்லாம் நினைவு கூர்ந்து பேசியிருந்தார்.
மறுநாள் காலை 8 மணி செய்தி தயாரிக்கும் பணிக்காக அன்று இரவு எடிட்டோரியல் ஷிப்ட் பொறுப்பு அண்ணன் மாடக்கண்ணு. அவருக்கு உதவியாக நாம்.
அண்ணன் மாடக்கண்ணுதான் சிவாஜியின் வரலாற்றை தொகுத்து எழுதினார். செய்தி ஆசிரியர் உட்பட எல்லோருமே பாராட்டிய அற்புதமான ஸ்கிரிப்ட்.
அதற்கு மிகப்பொருத்தமாக செய்தி தயாரிப்பாளர் ராஜ்குமார் செமையாக படக்காட்சிகளை கோர்த்திருந்தார்.
நடிகர் திலகத்தின் உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருவார்கள் என்பதால் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும் அவர்களுடைய அஞ்சலி, அரிய தகவல்கள் போன்றவை மக்களை சென்றடையும் என்று ராஜா சார் யோசனை சொல்ல, அது அப்படியே நிறைவேற்றப்பட்டது.
கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நடிகர்திலகத்தின் இறுதிச்சடங்கை பார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஏழுமலை வெங்கடேசன் என்கிற என் வாழ்வில் என்றென்றைக்கும் மறக்க முடியாத நிகழ்வுகள் இவை.
நாம் எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்தபோதிலும் சிவாஜியின் படங்களையும் அதற்கு நிகராக அணுஅணுவாக ரசித்து இருக்கிறோம்.
காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் 1970-களில் வசந்தமாளிகை, எங்கள் தங்க ராஜா தங்கப்பதக்கம் உத்தமன் என பாடல்களுக்காக திருப்பி திருப்பி பார்த்த படங்கள் அப்போதே ஏராளம்..
பின்னாளில் வளர்ந்தபிறகு ரசிகர்களுடன் விவாதத்தில் இறங்கும்போது, நடிகர் திலகத்தைப் பற்றி யாருக்கு தகவல்கள் அதிகமாக தெரியும் என்று முட்டி மோதுவோம்.
சிவாஜி நடித்த திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் போது முதல் நாள் இரவு சென்று சிவாஜி ரசிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தியேட்டரில் கமெண்டுகளை தெறிக்க விடுவோம்.
எந்தெந்த காட்சியில் சிவாஜி க்ளோசப்பில் வந்து பிரமாண்டமான திரையை ஆக்கிரமிக்கும் போது கைதட்டல்கள் தியேட்டரை அதிர செய்யும் என்பதெல்லாம் எங்களுக்கு அத்துபடி.
“வேணும்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது””
“எனக்கு தெரியும். உங்க அக்கா வரமாட்டா.. அவகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம் தான்”
வசந்த மாளிகையில் இந்த வசனங்கள் வரும் முன்னரே தியேட்டர் உள்ளே அதகளப்படும் சிவாஜியை நினைக்க நினைக்க எத்தனை எத்தனையோ விஷயங்கள் வந்து மோதுகின்றன.
சில படங்களில் நீண்ட நேரம் பேசிய வசனங்களை வைத்தும் ஸ்டைல், ரொமான்டிக், அழுகை போன்றவற்றிற்காகவும் பலரும் நடிகர் திலகத்தை சிலாகித்துப் பேசுவார்கள் .
அதையெல்லாம் விட நமக்கு பிடித்த சிவாஜி, சில வினாடிகளில் ஓரிரு வார்த்தைகளில் துவம்சம் செய்யும் காட்சிகள்தான்.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜியின் தங்கையாக வரும் ஜெயாவை திருமணம் செய்துகொண்டு வரதட்சணைக்காக விரட்டிவிட்டு மறு கல்யாணம் செய்ய முயற்சிப்பார் சசிகுமார். கர்ப்பிணியான ஜெயா பிரசவத்தில் குழந்தையை பெற்றுவிட்டு இறந்துவிடுவார்.
சுடுகாட்டில் தங்கையை அடக்கம் செய்துவிட்டு சிவாஜி திரும்பும்போது, எதிரே மைத்துனர் சசிகுமார் அழுதபடி ஓடி வருவார்.
துக்கத்தில் இருக்கும் சிவாஜி அப்போது நீண்ட வசனம் எல்லாம் பேசமாட்டார்.. கேவலமான மைத்துனரை பார்த்து ஒரு கையை மட்டும் அசைத்து அலட்சியமாக ஒரே வார்த்தை, “ச்சீ போடா..” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென போவார். ஒரே நேரத்தில் ‘1000 சிவாஜி’ மின்னல் வெட்டு அது..
குலமகள் ராதை படத்தில் சரோஜாதேவி காதலில் தன்னை ஏமாற்றி விட்டதாக உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி என அழுது பாடிவிட்டு, விரக்தியில் இருக்கும் சிவாஜியிடம் எதேச்சையாக உதவும் தேவிகா கேட்பார் ,பெண்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காதா?
“இல்லை..பயமா இருக்கு” இதை சலிப்புடன் சொல்லும் நடிகர் திலகம் சொல்லும் விதம்.. ஒரு வேளை என்ற சமூக வலைத்தளங்கள் அன்று இருந்திருந்தால் சிவாஜி ஒரு வரி டயலாக்குகள் மீம்ஸ் ஆக மாறியிருக்கும் .
இப்படி படத்துக்குப்படம் ஓரிரு வார்த்தைகளாலேயே சிவாஜி நின்று விளையாடிய விதம் பிரமிப்பாக இருக்கும்.. அதை கூர்ந்து பார்த்தால் தான் அந்த அற்புத தருணத்தை அனுபவிக்கவே முடியும். தலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு திறமை வாய்க்கப் பெற்றவர் சிவாஜி.
பிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும்.. அமெரிக்காவில் நடிப்பாசையால் அலைமோதிய மார்லன் பிராண்டோவுக்கு 1947-ல் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஷையர் என்ற நாடகம்..
முன்னணி நடிகர்கள் இருவர் கடைசி நேரத்தில் நடிக்க மறுத்ததால், 24 வயது பிராண்டோவுக்கு வாய்ப்பு கிடைத்து பெரிதும் பேசப்பட்டு பின்னாளில் திரையுலக பயணத்திற்கு அது வெற்றிப்பாதையையும் அமைத்தது…
1928-ம் ஆண்டு பிறந்த நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான்.,1946 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடிப்பதை கடைசி நேரத்தில் எம்ஜிஆர் தவிர்த்துவிட்டார்.
காங்கிரஸ் அபிமானியாக இருந்த எம்ஜிஆர், திராவிட வாடைக்குள் சிக்கி விடக்கூடாது என அண்ணன் எம் ஜி சக்கரபாணிதான் இந்த தவிர்ப்பை செய்யச் சொன்னார் என சொல்வார்கள்..
நாடக அரங்கேற்றதிற்கு மூன்றே நாட்கள்தான் இடையில் இருந்தன. பதறிப்போன அண்ணாவின் கண்ணுக்கு அப்போது ஏதோ ஒரு ஒளி தென்பட்டது.. அது, ஒத்தை நாடியாய் வசன ஒத்திகைக்கு வந்த கணேசன் என்ற 18 வயது இளைஞன்.
90 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து ‘’நீதான் மாவீரன் சிவாஜியாய் நடிக்கிறாய்’’ என்று சொன்னார். கணேசன் தயங்கவேயில்லை.. வசனங்களை மனதில் ஏற்ற ஆரம்பித்தார். இன்னாரு பக்கம் 29 வயது எம்ஜிஆருக்காக தைக்கப்பட்டிருந்த ஆடைகள் 18 வயசு கணேசனுக்காக சுருக்கி மாற்றி தைக்கப்பட்டுவந்தன.
நாடகம் அரங்கேறியது.. மராட்டிய வீரனாக கர்ஜித்த கணேசன், நாடகத்தை பார்க்கவந்த தந்தை பெரியாரின் கண்ணுக்கு சிவாஜியாகவே தெரிந்தார்..பெரியாரின் வாயால் கணேசன், அன்றைய தினமே சிவாஜி கணேசனாக மாறிப்போனார்.
ஆனாலும் எதிர்மறை விதி அவரை துரத்திக்கொண்டே இருந்தது.. 1948ல் வெளியான சந்திரலேகா படம் , பிரமாண்டமாக வளர்ந்துவந்த நேரம்..
அதில் ஒரு துண்டு ரோலாவது கிடைக்குமா என்று ஜெமினி பிக்சர்ஸ் வாசன் அலுவலகத்திற்கு எத்தனையோ முறை படையெடுத்தார். ‘’உனக்கெல்லாம் சினிமா செட்டாகாது தம்பி..பிழைப்புக்கு வேறு தொழிலை பார்த்துக்கொள் தம்பி ’’ என்று கடைசியில் வாசனால் நிராகரிக்கப்பட்டார் சிவாஜி..
இதே வாசன், பின்னாளில் சிவாஜியைநாடி இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற காவியங்களை எடுத்து வெற்றிபெற்றது தனிக்கதை.
திரையுலகில் கரைகண்டு நுரைதள்ளிய ஜாம்பவான் வாசனுக்கு தெரியாத சிவாஜியின் சிறப்பம்சம், சாதாரண படத்தயாரிப்பாளர் வேலூர் நேஷனல் தியேட்டர் உரிமையாளர் பீ.ஏ,பெருமாளுக்கு தெரிந்ததுதான் விநோதம். பீஏ பெருமாளை போலவே இன்னொரு கில்லாடிக்கும் தெரிந்தது.
அதுவேறுயாருமல்ல, நடிகை அஞ்சலிதேவிதான். உணமையில் சிவாஜி கதாநாயகனாய் சம்பளத்துடன் புக்கான முதல் படம், அஞ்சலிதேவி தயாரித்த பரதேசி படம்தான்..
1951ல் நிரபராதி என்றொரு படம்… முக்காமாலா கிருஷ்ணமூர்த்தி ஹீராவாக நடித்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான படம்.. நடிகர் முக்காமாலா எம்ஜிஆரின் நம் நாடு படத்தில் கிளைமாக்சில் போலீஸ் அதிகாரியாக வருவார்.
நிரபராதி படத்தின் தமிழ் வெர்ஷனில் முக்காமலாவால் தமிழைசரியாக உச்சரிக்க முடியவில்லை..இதற்காக டப்பிங் பேசும்வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது. சம்பளம் 500 ரூபாய்..அப்போது சிவாஜியின் வசன ஆற்றலை பார்த்துதான் நிரபராதி படத்தின் நாயகியான அஞ்சலிதேவி தன்னுடைய சொந்த படத்திற்கு சிவாஜியை கதாநாயகனாக புக் செய்தார்.
ஆனால் அஞ்சலிதேவியின் பரதேசி படம் தயாராவதற்குள் பி.ஏ-பெருமாளும் ஏவிஎம்மும் கூட்டாக தயாரித்த பராசக்தி வேகமாக வளர்ந்து 1952ல் வெளியாகி சக்கை போடுபோட்டு வெள்ளி விழாவே கண்டுவிட்டது..
பராசக்தியின் இமாலய வெற்றிக்களிப்பில் சிவாஜி மிதக்கவேயில்லை.. இப்படிப்பட்ட ரோல்கள்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை..
எந்த பாத்திரம் என்றாலும் தயார் என்று ஓப்பனாய் சொன்ன சிவாஜி, பெரும்பாலும் இமேஜ் பார்த்ததே யில்லை.. பராசக்தி ஹீரோவாய் மிரட்டிய அவர், அடுத்த சில படங்களில் வில்லத்தன கதாநாயகனாய் தாராளமாக நடித்துத்தள்ள முடிந்தது..
திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே பிரதானம் எனத்திரியும் பாத்திரம் சிவாஜிக்கு
வெறிபிடித்த தம்பியை திருத்த வேறுவழியின்றி, கடைசியில் “உனக்கு காம இச்சையை போக்கிக்கொள்ள இப்போது ஒரு பெண்தானே வேண்டும் இதோ நான் இருக்கிறேன், என்னையே எடுத்துக்கொள்” என்று சிவாஜியை பார்த்து அக்கா பண்டரிபாயே பேசுவார்.
பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
இங்கே ஒரு வியப்பான ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும் சிவாஜி முதன்முதலாய் கதாநாயகனாக புக் செய்யப்பட்ட நிரபராதி படத்தில் சிவாஜிக்கு தாய் பண்டரிபாய். அடுத்த படமான பராசக்தியில் காதலியாக பண்டரிபாய்.. இரண்டு படங்கள் தள்ளி வந்த திரும்பிப்பார் படத்தில் சிவாஜியின் அக்காவாக பண்டரிபாய்..
பாடல்களே இல்லாத முதல் தமிழ்படமான அந்த நாள் (1954) படத்தில் அப்படியொரு கொடூரமான தேசத்துரோகி வேடம்.. மனைவி பண்டரிபாய் கையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு சாகடிக்கப்படுவார்
படம் ஆரம்பித்த முதல் பிரேமிலேயே கதாநாயகன் செத்துக்கிடக்கவேண்டும். எந்த கதாநாயகன் இப்படி நடிக்க ஒப்புக்கொள்வான்? ஆனா சிவாஜி என்ற கலைஞன் ஒப்புக்கொண்டு துவம்சம் செய்தார்..
முன்னணி ஹீரோவான எம்ஜிஆரின் கூண்டுக்கிளி படத்தில் நண்பனின் மனைவியையே சூறையாடத்துடிக்கும் காமவெறிபிடித்த மிருகம் வேடம்.. எம்ஜிஆர் சிறைக்கு சென்று விட அவரது  மனைவி சரோஜா பசியால் வறுமையால் வாடுவார். அவரிடம் போய் உனக்கு அரிசி வாங்கித்தருகிறேன் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாரா என்று காமத்தின் உச்சத்தில் கேட்பார்.. இப்படியே கூண்டுக்கிளி படம் முழுக்க மிரட்டி எடுத்தார் சிவாஜி..
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.
அமெரிக்கா அரசால் கௌரவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நடிகர் திலகத்தை மக்கள் திலகம் வாழ்த்தி 1962 நடிகன் குரல் பத்திரிகையில் புகழ்ந்து தள்ளி எழுதினார் . அந்தக் கட்டுரையின் சில அம்சங்களைக் கீழே பார்ப்போம்.
”நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம்.
ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.
‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார். பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.
இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள்.
நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலி ருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை.
நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பன வற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாத வற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றி ருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.
அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் “சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு..
– 59 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தன்னால் முடிந்த அளவுக்கு நடிகர் திலகத்திற்கு பெருமை சேர்த்தார் அன்றைய கட்டத்தில் புரட்சி நடிகராக விளங்கிய எம்ஜிஆர்.
மறுபடியும் பராசக்தி காலகட்டத்திற்கு வருவோம்.. சிவாஜிக்கு பராசக்தியில் வசனத்தால் கைகொடுத்த கலைஞர் அவர்கள், தொடர்ந்து தனது வசனங்களால் சிம்மாசனங்களை போட்டுத்தந்த படியே இருந்தார்..
பணம், திரும்பிப்பார், மனோகரா, ராஜராணி, ரங்கோன் ராதா, புதையல், இருவர் உள்ளம் என நடிகர்திலகம்- கலைஞர் காம்பினேஷன் கலக்க ஆரம்பித்தது..
இடையில் பீம்சிங், பி.ஆர்.பந்துலு. ஏபி, நாகராஜன் என்ற மும்மூர்த்திகள் கிடைக்க, சிவாஜியின் திரைப்பயணம் ஜெட் வேகமாகவே மாறியது..
டைரக்டர் பீம்சிங் பதிபக்தி, பாவமன்னிப்பு பாசமலர், பாலும் பழமும், படித்தால் மட்டும்போதுமா, பார்த்தால் பசி தீரும் என ‘’ப’’ வரிசை படங்களாய் எடுத்து வெற்றியாய் குவித்தார்.
பெரும்பாலும் வங்காள நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் சிவாஜி பல்வேறு பரிமாணங்களில் அற்புதமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்..
பாவ மன்னிப்பில் திராவகம் ஊற்றி முகம் சிதைக்கப்பட்ட பாத்திரம், பாகப்பிரிவினையில் ஒரு கைவராத பாத்திரம், பார்த்தால் பசி தீரும் படத்தில் நண்பனின் முதல் மனைவியை காப்பாற்றுவதற்காக தன் காதல் வாழ்க்கையையே தியாகம் செய்ய துணியும் நட்பின் இலக்கணம் பாத்திரம்.. எத்தனை எத்தனை வித்தியாசமான பாத்திரங்கள்.. அடுக்கிக்கொண்டே போகலாம்.
இயக்குனர் பிஆர் பந்துலு இன்னொருபக்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என சிவாஜியை வரலாற்று காவியங்களின் நாயகனாக முத்திரை பதிக்கவைத்தார்.
ஆரம்பத்தில் சிவாஜியை வைத்து வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, நவராத்திரி என குடும்ப படங்களை கொடுத்த ஏ.பி. நாகராஜன் திடீரென என்ன நினைத்தாரோ, புராண படங்களாய் எடுத்து சிவாஜியை விதவிதமான கடவுள் பாத்திரங்களில் காட்ட ஆரம்பித்தார்.
திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை என நீண்ட பட்டியலில் திடீர் திருப்பமாக தில்லானா மோகனாம்பாள் வந்து இடம் பிடித்தார்..
மோகனா, வைத்தி, வடிவாம்பாள், ஜில்ஜில் ரமாமணி, தவில் வித்வான் ஆகியரெல்லாம் சுழன்று சுழன்று அடித்தும் தன்னுடைய பாத்திரமான நாயன வித்வான் சண்முக சுந்தரத்தை யாரும் நெருங்க முடியாமல் நடிப்பில் அவர் காட்டிய சாகசம், விவரிக்க வார்த்தைகளே போதாது..
புதிய பறவை கோபால், வசந்தமாளிகை ஆனந்த், உயர்ந்த மனிதன் ராஜூ போன்ற பாத்திரங்களின் முன்னால் நிஜமான ஜமீன்தார்கள், கோடீஸ்வரர்கள்களின் ஸ்டைல், பணக்கார தோரணைகூட எடுபடுமா என்பது சந்தேகமே….
வக்கீல் உலகமே வியப்பாக பார்த்த கௌரவம் பாரீஸ்டர் ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரிகளையே மிடுக்காக இருக்கத்தூண்டிய தங்கப்பதக்கம் எஸ்பி சௌத்ரி என மேல் தட்டுவர்க்க ஆளுமைகளையும் சிவாஜியின் நடிப்புலகம் அசைத்துப்பார்க்க தவறவேயில்லை.
உணர்ச்சிமயக்குவியல் காட்சிகள் கொண்ட படங்களில் அவர் காட்டிய நடிப்பாற்றலை திரைப்பட கல்லூரி களில்கூட அவ்வளவு சுலபத்தில் விவரித்துவிட முடியாது.
நான் பெற்ற செல்வம், பாகப்பிரிவினை, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, சாந்தி, நீலவானம், வியட்நாம் வீடு, பாபு, கவரிமான் என அந்த பட்டியல் மிகப்பெரியது. பத்மினியும் கே.ஆர்.விஜயாவும் சிவாஜியின் திரைப்பயணத்தை அலங்கரிக்கக் கிடைத்த பொக்கிஷங்கள் என்று இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்..
சிவாஜியுடன் பத்மினி 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து புதிய சாதனையையே படைத்தார். இதற்கு நான் என்ன சளைத்தவளா என்று பின்னால் களமிறங்கினார் கே ஆர் விஜயா.. இரண்டு நடிகைகளிடம் நடிகர் திலகத்திற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம்..
அதிலும் ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய இரு மலர்கள் படத்தில் சிவாஜியின் சுந்தர் பாத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கே ஆர் விஜயாவும் பத்மினியும் போட்டிபோட்டு அதேநேரத்தில் எங்குமே மிக நடிப்பாற்றலை வெளிப்படுத்தாமல் இயல்பாக வாழ்ந்து காட்டி விட்டுப்போய் இருப்பார்கள்..
நடிப்பு மட்டுமின்றி படத்தயாரிப்பிலும் கல்க்கியவர் சிவாஜி. இந்த விஷயத்தில் அவர் ஒரு வித்தியாசமான மேஜிக் மேன் என்றே சொல்லலாம்.. 1964ல் புதிய பறவை எடுத்த சிவாஜி, 1970களின் இறுதியில் ரஜினி- கமல் சகாப்தம் ஆரம்பித்த கட்டத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல் எடுத்த படம், திரிசூலம்.
இதில் மூன்று வேடங்களில் நடித்து 1979ல் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் போர்டை பல வாரங்களுக்கு தொங்கவிடவைத்து, மூட்டை மூட்டையாய் வசூலை கட்டிப்போகும் வித்தை அவருக்கு தெரிந்திருந்தது..,
சிவாஜி உட்கார்ந்தாலும் நடிப்பு, நின்றாலும் நடிப்பு.. அது, அவர் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம்.. இதை புரிந்துகொண்டுதான் பாரதிராஜா, முதல் மரியாதை என்ற காவியத்தை கொடுத்தார், கமலஹாசனும் தேவர் மகன் என்ற படத்தை சிவாஜியை வைத்து காவியமாக்கிக்கொண்டார்.
பாமரன் முதல் படைப்பாளிகள்வரை அனைவரையும் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டதால்தான் சிவாஜியின் பெருமை நாடுகள் கடந்து இன்றும் பேசப்படுகிறது.
1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்பு த்திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னணி நடிகர்களான (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் தேடிஓடிவந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது.
விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு.
உலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை..
‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது”.
உண்மைதான் நடிகர்திலகத்தின் நடிப்பு மட்டுமின்றி சில சாதனைகள் மிகவும் வித்தியாசமானவை.
ஒரு முன்னணி கதாநாயகனின் இரு படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்வதும் அவை இரண்டுமே வெற்றி பெறுவதும் சாதாரண விஷயமல்ல.
அந்தநாள்-கல்யாணம்பண்ணியும் பிரம்மச்சாரி 03.06.1954
கோட்டீஸ்வரன்-கள்வனின் காதலி 13.11.1955
நல்லவீடு-நான்பெற்ற செல்வம் 14. 01.1956
மணமகன்தேவை – புதையல் 10.05.1957
பாவை விளக்கு-பெற்றமனம் 19.10.1960
முரடன் முத்து-நவராத்திரி 03.11.1964
ஊட்டிவரை உறவு – இருமலர்கள் 01.11.1967
எங்கிருந்தோ வந்தாள்-சொர்க்கம் 29.10.1970
பிராப்தம்- சுமதி என் சுந்தரி 14.04.1971
டாக்டர் சிவா- வைர நெஞ்சம்..02.11.1975
பரிட்சைக்கு நேரமாச்சி-ஊரும்உறவும் 14.11. 1982
கிருஷ்ணன் வந்தான்- ஜல்லிக்கட்டு 18.07.1987
இதுபோன்ற சாதனைகள் போல
நடிப்பைத் தாண்டி சிவாஜிக்கு இன்னும் பல வியப்பான பக்கங்கள் உண்டு..
கிரிக்கெட் புட்பால் என்றால் அவருக்கு உயிர்.. கிரிக்கெட்டில் லேட்டஸ்டாக அவருக்கு மிகவும் பிடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.. சச்சின் அவுட் ஆகி விட்டார் என்றால் கோபத்தில் டிவியை அணைத்து விட்டு சென்று விடுவாராம் நடிகர் திலகம். அவர் மகன் நடிகர் பிரபு சொன்ன தகவல் இது ..
நடிகர் பிரபுவை தலைசிறந்த ஃபுட்பால் பிளேயர் ஆக்கத்தான் விரும்பி இருக்கிறார் நடிகர் திலகம். ஆனால் அந்த குண்டு பந்துதான் அதற்கெல்லாம் செட் ஆகாமல் சங்கிலி படத்தின் மூலம் தந்தை நடிகர் திலகத்துடன் திரை உலகில் ஒட்டிக்கொண்டது.
எல்லாவற்றையும்விட சுவாரஸ்யமான விஷயம், தனது பிறந்த நாள் எப்போது என்று சிவாஜி தெரிந்துகொண்டதுகூட வித்தியாசமான வரலாறுதான். சிவாஜியின் தந்தையான விழுப்புரம் சின்னய்யா, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைபிடிக்கப்பட்டார்..
அன்றைய தினம்தான் ராஜாமணிக்கு சிவாஜி பிறந்தார். பின்னாளில் இந்த சிறைபிடிப்பு தினத்தை கண்டுபிடித்த பிறகே அக்டோபர் ஒன்றாம் தேதி சிவாஜியின் பிறந்ததினம் என தீர்மானிக்கப்பட்டது.
( ஏற்கனவே சொன்னவற்றையும் சொல்லாத சிலவற்றையும் சேர்த்து ஒரு பதிவாக தந்து விட்டோம் )