சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரத்து 58 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டபோது, அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது காவல்துறை விசாரணையில், அம்பலமானது.
இதையடுத்து 199 பேர் மீது வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 66 பேர் சிக்கியுள்ளனர். அவர்களின் முழு முகவரி மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட விரிவுரையாளர் பணிக்கான தேர்வு மீண்டும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.