தஞ்சை
தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொடங்கவில்லை எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலம் எங்கும் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. இதில் தஞ்சை மாவட்டத்தில் 745 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை இன்று தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் ஆய்வு செய்தார். அவர் தஞ்சையை அடுத்த முன்னயம்பட்டியில் நடந்த முகாமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது அமைச்சர் மா சுப்ரமணியன், “ இதுவரை மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்த பட்டுவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை மூன்றாம் அலை கொரோனா தொடங்கவில்லை. இதைத் தடுக்க இந்தியாவுக்கு 115 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு இருக்க இந்தியத் தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை ஏற்க இயலாது. முந்தைய அதிமுக ஆட்சியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.