காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. வில் சேருவதற்கு பணம் கொடுத்ததாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசை கவிழ்க்க உதவிய 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களில் ஒருவரும் கக்வாட் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீமந்த் பாட்டீல் 2019 ம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசில் ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா.ஜ.க. வில் சேருவதற்கு எனக்கு பெரும் தொகை தருவதாக கூறினார்கள், ஆனால் எனக்கு பணம் எதுவும் தேவையில்லை, அதற்கு பதிலாக அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுப் பெற்றேன்.
இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் எனக்கு இடம் தரவில்லை, அதற்காக அவரிடம் நான் மீண்டும் முறையிடுவேன் என்று கூறினார்.
கட்சி தாவுவதற்கு பா.ஜ.க. பணமளிக்க முன்வந்ததாக கூறிய இவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்காக பா.ஜ.க. வினர் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக அதன் தலைவர்கள் கூறுவதன் உண்மையான காரணம் புரிவதாக சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.