சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக மாறிப் போயிருக்கும் பல இடங்கள், ஒரு காலத்தில் ஆரணி மகாராஜா அரண்மனையாகவும், ஆற்காடு நவாபுகளின் கட்டிடங்களாகவும், டிராம் ஷெட்டுகளாகவும், சமீப காலங்களில் புகழ்பெற்ற இயக்குனர்களின் குதிரை லாயங்களாகவும் இருந்ததையும் காட்டன் பெட்டிங் நடந்ததையும் ஒன்று விடாமல் அசை போடும் பாட்டி தாத்தாக்களிடம் பௌத்தம் தழைத்தோங்கிய பாரத நாட்டில் பௌத்த மதம் எப்படி அருகிப் போனது என்று கேட்டால் அதைப்பற்றி அறிந்ததாக கூறமாட்டார்கள், மாறாக தமிழ் சமணமும், ஜைன மதமும் பற்றி தங்களுக்கு தெரிந்ததைக் கூறுவார்கள்.
இப்படி, பேச்சு வழக்கில் கூட அருகிப் போய்விட்ட பௌத்த மதம் மற்றும் பௌத்தர்கள் பற்றிய தகவல்களை “இந்தியாவில் பௌத்த மதம் காணாமல் போனது எப்படி ?” என்ற பெயரில் வரலாற்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், சோனாலி ரானடே, இந்த கட்டுரையின் முக்கிய பகுதிகளின் தமிழாக்கம் :
இன்றைய ஈரானில் உள்ள காஸ்பியன் கடலை தனது வடக்கு எல்லையாகக் கொண்டு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடக்கு சீனாவின் சில பகுதிகள் மற்றும் காஷ்மீர், பஞ்சாப், மத்திய பிரதேசம் வரை பரந்து விரிந்திருந்த பௌத்தத்தை ஆதரித்த மௌரிய சாம்ராஜ்யம் (கி.மு. 322 முதல் கி. மு. 185 வரை) மற்றும் அசோகரும், கனிஷ்கரும் தோன்றிய குஷான சாம்ராஜ்யம் (கி.பி. 1 முதல் கி.பி. 250 வரை) ஆகியவற்றுக்குப் பின் சற்றேரக் குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய பௌத்தர்கள் அதன் பின் என்ன ஆனார்கள் என்பதை அறியத் தூண்டியது இந்த வரைபடம்.
சீனாவில் இருந்து ரோம் நகருக்கான பட்டுவழிச் சாலையின் முக்கிய நகரங்களில் குஷானர்களின் அதாவது பௌத்தர்களின் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.
மௌரியர்களுக்கும் குஷானர்களுக்கும் இடைப்பட்ட ஷுங் மன்னர்களின் காலத்தில், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட குறுகிய நிலப்பரப்பில், குறிப்பாக கி.மு. 185 முதல் கி.மு. 149 வரையிலான புஷ்யமித்ர ஷுங்-கின் 40 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் தற்போது இந்துமதம் என்று அழைக்கப்படும் பிராமணீய தர்மத்தில் இருந்து புத்த மதத்திற்கு மதம் மாறும் கீழ் சாதி இந்துக்களை அவ்வாறு மதம் மாறுவதை தடை செய்தார்.
இவரின் இந்த அறிவிப்பு குறித்த வரலாற்றுக் குறிப்புகளை வைத்துப் பார்க்கும் போது, மௌரியர்கள் காலத்தில் புத்த மதத்திற்கு மதம் மாறியவர்கள் உழவு தொழில் ஒன்றைத் தவிர வேறு தொழில்களை நாடியதன் காரணமாகவும் தவிர, கடல் கடந்து செல்லத் தடை மற்றும் வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்ற பிராமணீய கோட்பாடுகளை ஏற்க மறுத்ததன் காரணமாகவும் மதம் மாறியதாக நம்பப்படுகிறது.
இப்படி புத்த மதத்திற்கு மாறியவர்கள் உழவுத் தொழில் தவிர, நெசவு, வண்டி மாடு ஓட்டுதல், வாணிபம், வியாபாரம் என்று வேறு பல தொழிலையும் செய்யத் துவங்கினர்.
இப்படி பட்டுவழிச் சாலையில் வாணிகத்தில் கொடி கட்டிப் பறந்த இனமாக இருந்த பௌத்தர்கள் கி.பி. 320 முதல் கி.பி. 550 வரையிலான குப்தா பேரரசின் ஆட்சிக்காலத்தில் பட்டுவழிச் சாலையில் செலுத்திவந்த ஆதிக்கத்தை ஹன்ஸ் மன்னர்களிடம் தாரைவார்த்தனர்.
காந்தகார் துவங்கி இப்போதைய குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வரையிலான நிலப்பரப்பை ஆண்டு வந்த குப்த பேரரசின் காலத்தில், ஹிந்து மதம் என்ற பெயரில் வேதக் குழுக்கள் மீண்டும் கோலோச்சியது.
இருந்தபோதும், குப்தர்கள் இந்து மதம் மற்றும் பௌத்த மதம் இரண்டையும் அனுசரித்தே ஆட்சியை நடத்தியதால், இந்து மதத்தில் இருந்து பௌத்தத்திற்கு மதம் மாறுவது நின்று போனதோடு, குறிப்பிட்டுச் சொல்லும்படியான மக்கள் 600 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்து மதத்தைத் தழுவத் துவங்கினர்.
கி.பி. 550 க்குப் பின் சரியத் துவங்கிய குப்தர்களின் ஆட்சிக்குப் பின் 606 முதல் 647 வரை ஆட்சி செய்த மன்னர் ஹர்ஷவர்தன் காலத்தில், இந்திய வரலாற்றை எழுதிய முக்கிய நபர்களான ஹுவாங் சுவாங் மற்றும் பானபட்டா ஆகிய இருவரும் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதே காலகட்டத்தில் அரபு நாடுகளில் ஆட்சி புரிந்த மன்னர்கள், ரோமானியர்களிடம் இருந்தும் ஐரோப்பியர்களிடம் இருந்தும் கடல் வாணிபத்தை தனதாக்கிக் கொண்டனர்.
கி.பி. 1498 ல் போர்ச்சுகீசியர்கள் பீரங்கிகளுடன் இந்த கடல் பகுதியில் வந்து நுழையும் வரை பல நூறு ஆண்டுகள் அரேபியர்கள் இந்தக் கடல் பகுதியை தங்கள் வசம் வைத்திருந்த போதும், இந்திய மன்னர்கள் அதை முறியடிக்க எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.
கி.பி. 660 க்குப் பின் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்த அரேபியர்கள், 711 ம் ஆண்டு முகமத் பின் காசிம் தலைமையில் சிந்து மாகாணத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றியதோடு, இந்திய மன்னர்களின் பட்டுவழிச் சாலை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாகவே கருதப்படுகிறது.
இதுவே இன்றுவரை நாம் மேற்கத்திய நாடுகளின் தயவில் வர்த்தகம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்துக்கள் பெரும்பாலும் உழவுத் தொழிலைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். பௌத்தர்கள் வாணிகத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால், தங்கள் தொழில் நிலைக்க வேண்டிய காரணத்திற்காகவும், இஸ்லாமியர் அல்லாதவருக்கு விதிக்கப்பட்ட ஜஸியா வரியில் இருந்து தப்பிக்கவும், இஸ்லாம் மதத்திற்கு மதம் மறைத்த துவங்கினர்.
அரபியர்கள் சிந்து சமவெளியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளில் பௌத்தர்கள் அனைவரும் சொந்த விருப்பத்தின் பெயரில் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் இஸ்லாம் மதத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டனர்.
சிந்து சமவெளியில் வாழ்ந்துவந்த இந்துக்கள் 1947 ம் ஆண்டு பிரிவினையின் போதுதான் அங்கிருந்து வெளியேறினார்கள்.
ஆக, பௌத்தர்கள் இந்தியாவில் காணாமல் போகவில்லை அன்று இருந்த அதே மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்றும் வட இந்தியாவில் இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு சோனாலி ரனடே தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.