ராய்ப்பூர்: பிராமணர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பேசிய மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் ((வயது 86) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அவர்மீது ஏராளமானோர் புகார் கூறினார். இதையடுத்து, அவர்மது வழக்குப்பதிவு செய்த காங்கிரஸ் மாநில அரசு, மாநில முதல்வரின் தந்தை 86வயது முதியவரான நந்தகுமார் பாகலை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்திஷ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வரின் தந்தையான நந்தகுமார் பாகல் (வயது 86) சமீபத்தில் உ.பி.க்கு சென்றிருந்தார். அங்கு அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘இந்தியாவில் உள்ள எந்தவொரு கிராமத்துக்குள்ளும் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். இதுதொடர்பாக நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். வோல்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் அனுப்பப்படுவது அவசியம்’ என பேசினார்.
அவரது பேச்சு சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் உள்ளதாக புகார்கள் எழுந்தன. இது சர்ச்சையான நிலையில், நந்தகுமார் பால் மீது ஏராளமானோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தந்தையின் பேச்சுக்கு மாநில முதல்வர் பூபேஷ் பாகலும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, நந்தகுமார் பாகல்மீது வழக்கு பதிவு செய்த சத்திஷ்கர் மாநில காவல்துறை, இன்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.