தெலுங்கு நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷனின் தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது. புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்காக செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தமுறை நரேஷ் போட்டியிடவில்லை. அவரும் அவரது ஆதரவாளர்களும் விஷ்ணு மஞ்சுவை தலைவர் பதவிக்கு நிறுத்துகின்றனர். இவர் ரஜினியின் நண்பரான மோகன் பாபுவின் மகன்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது திடீர் ட்விஸ்டாக ஹேமா, ஜீவிதா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் பிரகாஷ் ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடி போட்டி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை தற்போது அறிவித்து உள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத் தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத் தலைவர்களாகவும், ஜீவிதா பொதுச் செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.