தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை யூடியூப்பில் வெளியிட்டதாக மீரா மிதுன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு, அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் 2-வது முறையாக அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு பின்பு, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நட்சத்திர ஹோட்டல் மேலாளரை மிரட்டிய வழக்கில் மீரா மிதுனை கைது செய்த வழக்கில் அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.