காபூல்

ப்கானில் இருந்து டாக்டர்கள், எஞ்சினீயர்கள் போன்ற திறனுள்ளவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என தாலிபான்கள் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து திரும்பச் செல்வதாக அறிவித்த உடன் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நகராகக் கைப்பற்றத் தொடங்கினர்.  இறுதியாகத் தலைநகர் காபூலைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.  இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.  ஏராளமான ஆப்கான்கள் நாட்டை விட்டு வெளியேறிப் பல உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதில் அமெரிக்க அரசு ஆப்கானில் இருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற படித்த மற்றும் திறனுள்ளோரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கின்றது.   இந்நிலையில் தாலிபான் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகித் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளார்.  இது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடக்கும் இரண்டாவது செய்தியாளர் சந்திப்பு ஆகும்.

அப்போது அவர், “”ஆப்கான்கள் நாட்டை விட்டுச் செல்வதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.  இனியும் நாங்கள் எந்த ஒரு ஆப்கான் மக்களையும் விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.   அங்கு நாட்டை விட்டு ஓடுவோர் கூட்டத்தால் பல அசம்பாவிதங்கள் நேருகிறது.  எனவே அவர்கள் தங்கள் இல்லத்துக்கு திரும்பலாம்.  அவர்களை நாங்கள் பாதுகாப்போம்.

பெண்கள் அவர்கள் பாதுகாப்புக்காக தங்கள் இல்லத்துக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..   அவர்களை பணிக்குச் செல்லாமல் நிரந்தரமாகத் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.  அமெரிக்கர்கள் தங்கள் நாட்டவரை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்.   இது குறித்து ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளோம்.

ஆனால் அவர்கள் ஆப்கானைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களை  போன்ற படித்த மற்றும் திறமையானவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டாம்.   அவர்களது சேவை எங்களுக்கு மிகவும் அவசியம் ஆகும்.  எனவே நாங்கள் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்.  இதுவரை யாரையும் நாங்கள் குறி வைத்து தாக்கவும் இல்லை, வீடு வீடாக சோதனைகள் செய்யவும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.