சேலம்: பெரியார் பல்கலைக்கழகமா? ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழமா? என சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் மாநகரில் பெரியார் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பெரியார் கொள்கைகளுக்கு எதிராக, பல நிகழ்வுகள் நடந்து கொண்டு இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
இன்று (16.8.2021) மதியம் 12 மணிக்கு, பெரியார் பல்கலைக்கழக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
கருத்தரங்கிற்கு என்ன தலைப்பு தெரியுமா? “வேதசக்தி வர்மக்கலையும், பண்பாட்டுப் பின்புலமும்” என்பதாகும்.
கலைஞர் ஆய்வு மையத்திற்கும் வர்மக்கலைக்கும் என்ன தொடர்பு என்று நமக்குத் தெரியவில்லை ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை, அறிவியல் அல்லது தற்காப்புக்கலை என்னும் பெயரில் திணிப்பதுதான் நோக்கம் என்று தெரிகிறது.
இந்தக் கருத்தரங்கில் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பதிவாளரால் பணிக்கப்பட்டுள்ளனர். அதாவது அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக இல்லாமல், ஆணையாக விடுத்துள்ளனர். இது என்ன நியாயம்?
பெரியார் பல்கலைக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத பா.ஜ.க’வைச் சேர்ந்த எச். ராஜா, பல்கலைக்கழகத்திற்குள் வந்து ஒருமுறை நெடுநேரம் கலந்துரையாடல் நடத்தியதாக ஒரு செய்தி வந்தது. இப்போது நடக்கும் செயல்களைப் பார்த்தால், இது பெரியார் பல்கலைக்கழகமா ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழகமா என்ற அய்யமே எழுகிறது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் இப்போக்கைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிகக்கடுமையாக கண்டிக்கிறது.