டெல்லி: பிரதம மந்திரி கிஷான் நிதிஉதவித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 9வது தவணையாக இன்று ரூ.2000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9.75 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.19.500 கோடி இன்று வங்கிகளில் செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை விவசாயிகள் நாளை வங்கிகளில் எடுத்துக்கொள்ளலாம்.
மோடி தலைமையிலான பாஜக அரசுபதவி ஏற்றதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 9-வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். இதன்மூலம் 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கும் பிரதமர் மோடி விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.