டில்லி

னி ரயில்களில் பயணிகளுக்கு வைஃபை வசதி வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராஜதானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களில் பயணிகளுக்கு வைஃபை வசதி அளிக்கப்படுகிறது.  இதன் மூலம் பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து இணையச் சேவைகளைப் பெற முடிந்தது.   பலருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  இந்த வசதியை ரத்து செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர் காலத்தொடரில் மக்களவையில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.  இந்த கேள்விக்கு மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாகப் பதில் அளித்தார்.

அந்த பதிலில் அமைச்சர், “தற்போது ரயில்களில் ‘வை-பை’ தொழில்நுட்பம் அடிப்படையிலான இணையச் சேவைகளை அலைவரிசை கட்டண அடிப்படையில் பெற வேண்டியதுள்ளது. இதில் மூலதன செலவு அதிகமாகிறது. இதனை அமல்படுத்தும் செலவும் குறையவில்லை.  அத்துடன், பயணிகளுக்கு போதிய இணைய அலைவரிசை கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

எனவே, இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.எனவே, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அலைவரிசை மூலம் ஹவுரா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட இணையச் சேவை ரத்து செய்யப்படுகிறது.” என அறிவித்துள்ளார்.