“என் மாமனார் திரு.முத்துநாராயணன் அவர்களின் 80 வ்யது பூர்த்தியைக் கொண்டாட விரும்பினோம்.. பெரியாரின் தீவிரமான தொண்டரான அவருக்கு சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை என்பதால் ஒரு பாராட்டு விழாவாக நடத்தினோம். அவருடைய ஆத்மார்த்தமான நண்பரான திரு.பண்ருட்டி. ராமச்சந்திரன் தலைமையில் நேற்று விழா சிறப்பாக நடந்தது.
என் மாமனாருக்கு உடை, நகை என்று எதிலும் நாட்டமில்லை என்பதால் அவரை மகிழ்ச்சிப் படுத்துவதை மட்டும் விழாவின் நோக்கமாக அமைத்தோம். அவருக்குத் தெரியாமல் அவரின் அத்தனை முக்கிய உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் எங்கள் விழாக் குழு அணுகி அவரைப் பற்றிப் பேசச் சொல்லி விடியோவில் பதிவு செய்து மொத்தமாக அரை மணி நேர திரைப்படம் போல தொகுத்து விழாவில் திரையிட்டோம்.. கண்கள் கலங்க அசந்துவிட்டார்.
அடுத்து அவரே மறந்து போன பழைய கறுப்பு வெள்ளை புகைப்படங்களைத் தொகுத்து ப்ரொஜெக்டரில் போட்டு அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் அவ்ரின் நினைவில் தோன்றும் எண்ணங்களைச் சொல்லச் சொன்னோம். நானே மறந்துவிட்ட இந்தப் புகைப்படங்களை எல்லாம் எங்கேப் பிடித்தீர்கள் என்று தொண்டை அடைக்கக் கேட்டபடி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்து ..அவரின் பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொண்டு அவருக்குப் பிடித்த எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் பாடல்களுக்கு ஆட வைத்து, அவருக்குப் பிடித்த திருவிளையாடல் தருமி காட்சியை வசனம் மாற்றியமைத்து (தாத்தாவுக்கு பிடித்தது? தாத்தா மிகவும் விரும்புவது.?.) நடிக்க வைத்தோம்.
உச்சக்கட்டமாக அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சிந்தனைகளையும் தொகுத்து நம்பிக்கை இலவசம் என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாக மேடையிலேயே வெளியிட்டு வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தோம்.(அதென்ன நம்பிக்கை இலவசம்? அவரிடம் ஒருவர் பத்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தால் போதும்.. பத்து பைசா செலவில்லாமல் வாழ்வில் புதிய நம்பிக்கை இலவசமாகக் கிடைக்கும் என்பதால்..)
நம்பிக்கை இலவசம் புத்தகத்தின் அட்டை ம்ற்றும் 184 பக்கங்களை வடிவமைத்து, விழா நிகழ்ச்சிகளுக்கு ஸ்க்ரிப்ட்ஸ் எழுதி, விழாவை சுவாரசியமாக காம்ப்பயர் செய்தது என் மூத்த மகள் ஸ்வர்ண ரம்யா.விழாவின் அழைப்பிதழை, போஸ்டர்களை, ஃபிளெக்சை டிசைன் செய்து, விடியோ படத்தை எடிட் செய்தது..என் இளைய மகள் ஸ்வர்ண ப்ரியா.
நேற்றைய தினத்தை அவரால் மறக்கவே இயலாதபடி ஆன்ந்த உணர்வுகளால் அலங்கரித்த இந்த விழாவிற்காக இவர்களைத் தவிர ஒரு பெரிய டீம் ஒரு மாதம் உழைத்தது. அவர் மகிழ்ச்சியில் திளைத்து விட்டார். உழைப்பு வீண்போகவில்லை.
– எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (முகநூல் பதிவு)