சென்னை: மேகதாது அணை கட்டும் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திட்டமிட்டபடி, வரும்  5ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.

 

தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் வரும் வழியில் மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், அணையை கட்டியேதீருவோம் என அங்குள்ள பாஜக அரசு முரண்டு பிடித்து வருகிறது. தற்போது, அங்கு புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பொம்மையும், அணையை கட்டுவோம் என பிடிவாதமாக கூறி வருகிறார்.

இதற்கிடையில், கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை தடுக்க வலியுறுத்தி ஆகஸ்டு 5ந்தேதி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.  இந்த நிலையில், பாஜகவின் போராட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேகதாது அணைகட்ட ஒரு செங்கல்கூட வைக்கமுடியாது என கர்நாடக முதல்வர் பொம்மைக்கு பதில் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி தஞ்சாவூரில் நடத்தப்படும் என்று கூறியதுடன்,  கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.