டெல்லி: தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 20ஆண்டு சிறைதண்டனை பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் தரப்பில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் சமரசம் பேசி, அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், பாதிரியார் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
கேரள மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கிறிஸ்தவ பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் கடந்த சில ஆண்டுகளுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கேரள மாநிலம் கோட்டியூரைச் சேர்ந்த மதகுரு ராபின் வடக்கும்சேரி, தன்னிடம் பாவமன்னிப்பு கோரிய இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
இந்த விவகாரத்தில் அந்த பகுதியைச்சேர்ந்த கிறிஸ்தவ பெரியோர்கள் அந்த இளம்பெண்ணிடம் சமரசம் பேசி, பாதிரியாருக்கு அந்த இளம்பெண்ணை மணம் செய்து வைப்பதாக உறுதி அளித்து உள்ளனர். இதையடுத்து, அந்த இளம்பெண், கிறிஸ்தவ பாதிரியாரை, திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினித் சரண், தினேஷ் மகேஸ்வரி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிறிஸ்தவ பாதிரியார் சார்பில் வழக்கறிஞர் வினித் ஜார்ஜும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கறிஞர் கிரண் சூரியும் ஆஜராகினர். அப்போது, ‘ அரசியலமைப்புச் சட்டத்தின்படி திருமணம் செய்ய மனுதாரருக்கு உரிமை இருக்கிறது, அதை தடுக்க முடியாது. மனுதாரரும், மனுதாரரால் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஜாமீன் கேட்டும் கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது, அதனால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம் என்று கூறினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ‘ உங்கள் மனுதாரருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணும் இடையிலான வயது வித்தியாசம் எத்தனை’ என்று வழக்கறிஞர் ஜார்ஜிடம் கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் ஜார்ஜ், ‘ மனுதாருக்கு 49 வயதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 25 வயதாகிறது’ என்றார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, ‘ இந்த வழக்கில் ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வு செய்தபின்புதான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்திடம் சென்று முறையிடுங்கள். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிடாது’ என மனுவைத் தள்ளுபடி செய்தனர்.