அமேசான் நிறுவனம் அமேசான் பிரெஷ் என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வருகிறது.
இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் புதிய தொழில்நுட்பங்களைத் தற்போது பயன்படுத்தி வருகிறது, லோகன் சர்க்கிள் ஸ்டோர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அமேசான் செயலி உதவியுடன் பொருட்களை வாங்கிக்கொண்டு வந்த வேகத்தில் திரும்பிவிடலாம் என்பது முக்கிய அம்சமாக உள்ளது.
கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர் தனது மொபைல் போனில் உள்ள அமேசான் செயலியில் உள்ள க்யூ.ஆர். கோட் ஸ்கேனரை ஆன் செய்துவிட்டு, தாங்கள் விரும்பிய பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பொருளை எடுக்கும் போதும் க்யூ.ஆர். கோட் வழியாக ஸ்கேன் ஆகிவிடும், அந்தப் பொருள் தேவை இல்லை என்று மீண்டும் எடுத்த இடத்திலேயே வைக்கும் போது அது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து கழித்துவிடும்.
இப்படி எல்லா பொருளையும் எடுத்துக்கொண்டு, வெளியேறும் போது இந்த செயலியில் இருந்து வெளியேறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் மொத்தமாக எடுத்த பொருட்கள் அனைத்திற்கும் உண்டான மதிப்பு வருவதுடன் அதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேமென்ட் முறைப்படி பணத்தைச் செலுத்தி வெளியேறலாம்.
இதுபோன்ற 15 லோகன் சர்க்கிள் கடைகள் அமெரிக்கா முழுவதும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாஷிங்டன் டி.சி. பகுதியில் தனது முதல் சூப்பர் மார்க்கெட்டை சமீபத்தில் திறந்திருக்கும் அமேசான் இதனை ‘ஜஸ்ட் வாக் அவுட் டெக்னாலஜி’ என்று விளம்பரப்படுத்தி வருகிறது.