சென்னை:
வாக்காளர் வசதி மற்றும் சிறந்த தேர்தல் நிர்வாகத்திற்கு தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் ஏற்பாடுகளின் முன்னேற்றமாக தகவல் தொழில்நுட்பம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், டுவிட்டர் மூலமாக கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அடுத்ததாக மொபைல் இன்டர்நெட் மூலம் புகார்களை கண்காணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் புகார் சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நேரடியாக சென்றுவிடும். பறக்கும் படை அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தாசில்தார் மூலம் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை புகைப்படம் எடுத்து ஜிபிஎஸ் சார்ந்த மொபைல் மூலம் அனுப்பி வைக்கலாம். அதேபோல் பொதுக் கூட்டம், வாகன அனுமதி, அலுவலகம் திறக்க அனுமதி உள்பட பல விஷயங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி பெறலாம்.
போலீசாரின் தடையில்லா சான்றும் 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். எஸ்எம்எஸ் மூலம் வாக்குப்பதிவு மையத்தை அறியலாம்.
அதோடு கூகுல் வரைபடம் மூலமும் அறியலாம். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சக்கர நாற்காலிகளை முன்பதிவு செய்து வாக்களிக்கலாம். அதிக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.