சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற அரசு உத்தரவுக்குத் தடை கோரியும், ஆகம விதிகளை மீறி அமைச்சர் சேகர்பாபு பேசி வருவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
ஆகம விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவும், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடக் கோரி சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், “குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்துவிட்டால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மாதம் அளித்த பேட்டியில், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு ஆகம விதிகளுக்கு முரணானது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில், 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன. அங்குள்ள நியமனங்களில் ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த 500 கோயில்கள் தவிர 43,500 கோயில்களில் தமிழக அரசின் திட்டப்படி, அறிவிப்புப்படி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம். எனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது. ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துஉள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, “சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு முரணாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ஆரம்பக் காலகட்டத்திலேயே ஸ்ரீதரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு, வாதங்களை முன்வைக்கும்படி அறிவுறுத்திய நீதிமன்றம் வழக்கை தள்ளிவைத்தது.