வடக்கு குஜராத் தோலவிர பகுதியில் உள்ள புராதன சின்னங்களை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு செவ்வாயன்று அறிவித்தது.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியமிக்க சின்னங்களின் எண்ணிக்கை நாற்பதாக உயர்ந்திருக்கிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நான் மாணவனாக இருந்தபோது தோலவிர பகுதியில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பார்த்து வியந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள சிலர், தோலவிர பகுதியில் 1990 ம் ஆண்டு தான் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது இந்நிலையில் 1950 ம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி மாணவராக இருந்தபோது எப்படி அங்குள்ள சின்னங்களைப் பார்த்திருக்க முடியும் என்று கேள்வியெழுப்பி இருக்கின்றனர்.

மேலும், ஒரு ஏழைத் தாயின் மகனாகப் பிறந்து டீ வியாபாரம் செய்ததாகச் சொல்லும் மோடியால் தனது சொந்த ஊரான வத்நகரில் இருந்து 332 கி.மீ. க்கு அப்பால் உள்ள தோலவிர நகருக்கு சென்று வர முடிந்தது என்பது வியப்பை ஏற்படுத்துகிறது என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடருக்கு நாடாளுமன்றம் பக்கம் ஒதுங்க முடியாமல் இருக்கும் பிரதமர் மக்களின் கவன ஈர்ப்புக்காக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் வண்ண விளம்பரங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் எந்தக் குற்றச்சாட்டைப் பற்றியும் கவலைப் படாதவராய் இருப்பதை சமூக வலைதளத்தில் பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே, வங்காள விடுதலைக்காக போராடியதாகப் பேசி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் மோடி இதுகுறித்து எழுந்த கேள்விகளுக்கு இன்றளவும் பதிலளிக்காத நிலையில், அவரிடம் இருந்து எதற்குத் தான் பதில் வரும் என்று காத்திருக்கின்றனர் அப்பாவி மக்கள்.