திருவனந்தபுரம், கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தை பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெறும் தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கிறிஸ்தவ ஆயர் ஒருவர்பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் நாமிருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையின்படி, தம்பதிகள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படாது உள்பட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இநத் நிலையில், கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில், ‘குடும்ப ஆண்டு’ கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, பாலா மறை மாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் அனைத்து ஆலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், பாலா மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில், 5குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகையும், அதற்கு மேல் குழந்தை பெறும் தம்பதிகளுக்கு மாதம் ரூ.2ஆயிரம் வழங்கப்படும். அந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறுகையில், ‘கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் 18.38 சதவீதமாக இருந்த கத்தோலிக்கர்கள் இப்போது 14 சதவீதம் ஆக உள்ளது. எனவே தான் கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய மாநில அரசுகள் மக்கள் தொகையை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் வகையில், அரசுக்கு எதிராக ஆயர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.