டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2ந்தேதி சென்னை வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அன்று மாலை சென்னை சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.
முன்னதாக ஆகஸ்டு 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைநகர்டெலல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். தொடர்ந்து கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா[வுக்கு தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலாலுடன் பங்கேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.
மேலும் மதுரையில் அமைய இருக்கின்ற கலைஞா் கருணாநிதி பெயரிலான நூல் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார். அத்துடன் சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கக் கூடிய வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமைய இருக்கின்ற நினைவு தூண் அடிக்கல் நாட்டுவிழாவிலும் பங்கேற்கிறார்.
அதைத்தொடர்ந்து கொடைக்கானல் கல்லூரி விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மொத்தம் 5 நாட்கள் குடியரசுத்தலைவர் தமிழகத்தில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.