சேலம்: நீட் தேர்வு ரத்து உள்பட திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தேனியிலும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த ஊரான எடப்பாடியிலும் பதாதைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், நீட் தேர்வு ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. அதுபோல பெட்ரோல் விலையை குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் கூறிவிட்டார்.
இதையடுத்து, திமுக ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிய நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வீடுகளின் முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினர் பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை செயலாளருமான எடப்பாடி பழனிசாமி , எடப்பாடியில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுபோல முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், தேனியில் உள்ள தங்களது வீடு முன்பு பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில், அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில், அம்மாவின் விசுவாசத் தொண்டர்கள் கூடி திமுகவின் போலியான, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க.ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜாகிர் உசேன், எஸ். சுரேஷ் குமார், நக்கீரன் நகர் சுரேஷ், ஸ்விம்மிங் ரவி, சதீஷ் குமார், சூலை ரகு, மாம்பலம் மணி, குரு சந்தோஷ், நடராஜன், கணேஷ், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் அதை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யவதற்கான நடவடிக்கையும் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.